/tamil-ie/media/media_files/uploads/2023/07/vengai-vayal-water-tank.jpg)
வேங்கை வயல் வழக்கு, 4 சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; டி.என்.ஏ பரிசோதனைக்கு சம்மதம்
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 70-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
பின்னர், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 21 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் வேங்கை வயல் பகுதியைச் சேர்ந்த 1 சிறுவன் இறையூர் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் என 4 பேருக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை கடந்த 12-ம் தேதி நீதிபதி ஜெயந்தி விசாரித்தார். சிறுவர்களுக்காக அவரது பெற்றோர்கள் ஆஜரானார்கள். இதையடுத்து, வேங்கை வயல் சிறுவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.என்.ஏ பரிசோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
இதற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில், வேங்கை வயல் சிறுவர்கள் 4 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து, நீதிபதி விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு தள்ளிவைத்து, 4 சிறுவர்களும், அவர்களின் பெற்றோர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
இந்நிலையில், வேங்கை வயல் வழக்கில், புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 4 சிறுவர்களும் பெற்றோர்களுடன் ஆஜரானார்கள். 4 சிறுவர்களின் பெற்றோர்களும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இறுதி தீர்ப்புக்கு வழக்கை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.