வேங்கைவயல் விஷயத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள், 8 பேரின் டி.என்.ஏ பரிசோதனை எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து நாங்கள் வழக்கு தொடர்ந்த பிறகு, தற்போது சி.பி.சி.ஐ. டி காவல்துறை 119 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்போது மட்டும் எப்படி 119 என்ற கணக்கு வந்தது என்றுதான் தெரியவில்லை என்று எவிடன்ஸ் கதிர் கேள்வி எழுப்பி உள்ளார்.
2022, டிம்சபர் 24 மற்றும் 25 தேதிகளில் வேங்கைவயலில் வசிக்கும் குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இந்த உடல் நலக்குறைவிற்கு, குடித்த தண்ணீர்தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியதன் பெயரில், அப்பகுதி இளைஞர்கள் முத்துகிருஷ்ணன், சுதர்சன், முரளிராஜா, தண்ணீர் தொட்டிக்கு மேலே சென்று பார்த்தபோது மலம் கலந்தது தெரியவந்தது. இந்நிலையில் இச்சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக எவிடன்ஸ் கதிரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக உரையாடினோம்.
சி.பி.சி.ஐ.டி விசாரணை எப்படி செல்கிறது?
சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. 11 பேரிடம், டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று சம்மன் அனுப்புகிறார்கள். இதில் 8 பேர் பாதிக்கப்பட்ட தலித் மக்கள். பாதிக்கப்பட்ட 8 பேருக்கு ஆதரவாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த புகாரில் “ பாதிக்கப்பட்ட மக்களிடமே, டி.என். ஏ பரிசோதனை செய்வது தவறு. டி.என்.ஏ பரிசோதனை தொடர்பான சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். டி.என்.ஏ பரிசோதனை செய்வதன் பின்புலன் தொடர்பாக தெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம்.
இந்நிலையில் இந்த வழக்கை தொடர்ந்த பிறகு, 119 பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி காவல்துறை கூறியுள்ளது. இப்போது மட்டும் எப்படி 119 பேர் என்ற கணக்கு வந்தது என்று தெரியவில்லை?
டி.என்.ஏ பரிசோதனை ஏன் செய்யப்படுகிறது? இது தொடர்பாக சி.பி. சி.ஐ.டி வெயிட்ட தகவல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
நீரில் உள்ள மலம் யாருடையது என்பது முக்கியமா? அல்லது மலத்தை யார் கலந்தது என்பதை கண்டறிவது முக்கியமா? என்ற அடிப்படை கேள்வி எழுகிறது. டிசம்பர் 26ம் தேதி மலம் கலந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நாளில் தண்ணீர் தொட்டியை பார்வையிட்ட காவல்துறையினர் மலத்தை எடுத்து பதப்படுத்தவில்லை. தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள், மலம் மற்றும் மலம் கலந்த தண்ணீரை காவேரிநகர் செல்லும் வழியில், சாலையோரமாக உள்ள குப்பைமேட்டில் கொட்டியுள்ளனர். டிசம்பர் 30ம் (கடந்த ஆண்டு) தேதி இரவு 8. 45 மணிக்கு தலித் குடியிருப்புக்கு சென்ற காவல்துறையினர் மலம் எங்கே கொட்டப்பட்டது என்று கேட்டு விசாரித்துள்ளனர். பின்பு குப்பை மேட்டில் கொட்டப்பட்ட மலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த மலத்தை பரிசோதனை செய்தில் எந்த பலனும் இல்லை.
டி.என்.ஏ பரிசோதனை தொடர்பாக நிபுணர்களிடம் பேசினேன். மற்றும் பல்வேறு வெளிநாட்டு ஆய்வுகளை படித்தேன். மலம் தண்ணீரில் கலந்தாலே, அது யாருடையது என்று கண்டுபிடிப்பது கடினமான ஒன்று. அப்படியே கண்டுபிடித்தாலும், அது துல்லியமாக இருக்குமா ? என்பது கேள்விகுறியே. இந்நிலையில் சம்பவம் நடந்த நாளில்தான் காவல்துறை, இந்த மலத்தை எடுத்து பதப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி பதப்படுத்தியிருந்தால், அது தொடர்பான விவரத்தை அவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் டி.என்.ஏ பரிசோதனையில் பெண், ஆண் மலம் என்ற செய்தியை சி.பி.சி.ஐ.டி காவல்துறை பத்திரிக்கையில் வெளியிடுகிறது. இதன் நோக்கம் என்ன? டி.என்.ஏ பரிசோதனை செய்வதே சாத்தியம் இல்லாத போது, இந்த விவரங்கள் எப்படி கிடைத்தது. இதை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் மே 6ம் தேதி முதல் விசாரணையை தொடங்குகிறது? இது குறித்து உங்கள் கருத்து?
தலித் மக்கள்தான் குற்றவாளிகள் என்று மீண்டும் வழக்கின் விசாரணையை திருப்புகிறார்கள் என்பது தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பிய பின்பே இந்த உத்தரவு வெளியாகிறது. இந்த ஆணையம் விசாரிக்க எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பது தெரியவில்லை. பொருத்திருந்து பார்க்கலாம்.
வேங்கைவயல் விவகாரத்தில் ஏதேனும் அழுத்தங்கள் சந்திக்கிறீர்களா?
ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் சிலர், வழக்கின் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க நான் தடையாக இருப்பதாக நினைக்கிறார்கள். மீண்டும் பாதிக்கப்பட்ட தலித் மக்களை அவர்கள் குறிவைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை பாதியில்விட்டுச் செல்ல நான் ஒன்றும் கட்சிக்காரனோ அல்லது அரசு அதிகாரியோ கிடையாது. இறுதிவரை துணையாக இருப்பேன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil