scorecardresearch

வேங்கை வயல் விவகாரம்: மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ சோதனை செய்ய உத்தரவு

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்களின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pudukottai human waste mixed with drinking water case transferred to CBCID
vengaivayal

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரடியாக சென்று ஆய்வு செய்ததில் அங்கு நீண்ட காலமாக சாதியப் பாகுபாடு இருந்து வருவது வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பல்வேறு நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டி.என்.ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதன்படி வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில், இரு தினங்களுக்கு முன் 11 டி.என்.ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்ய வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதில், 3 பேருக்கு சோதனை செய்த நிலையில் 8 பேர் பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மேலும் புதிதாக 10 பேருக்கு
டி.என்.ஏ மற்றும் ரத்த பரிசோதனை செய்ய புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்திருந்த‌து.

இதை பரிசீலித்த நீதிபதி சத்யா, மேலும் 10 பேருக்கு பரிசோதனை செய்ய அனுமதி அளித்து, பட்டியலை சென்னை பகுப்பாய்வு மையத்திற்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார். இந்த வழக்கில் 119 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vengaivayal case special court orders to collect 10 more people dna samples