தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கிராம மக்களோடு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் "முதல்மாடு அவிழ்க்கும்" நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாட்டுப் பொங்கல் தினத்தில் மாடுகளை குளிப்பாட்டும், ஊரின் புனித தீர்த்தமான காசாம்பளம் குளத்தில் முதல் மாடு அவிழ்ப்பவர் தனது மாடுகளை குளிப்பாட்டிய பின்னர், கிராமத்தில் உள்ளவர்கள் தங்களது மாடுகளை குளத்தில் ஒரே நேரத்தில் இறக்கி குளிப்பாட்டுவது வழக்கம்.
இந்த நிகழ்வுகளை காண்பதற்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், பிரான்ஸ், நெதர்லாந்து, போலந்து ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வேங்கராயன்குடிக்காட்டுக்கு வருகை தந்தனர். கிராமத்துக்கு வந்த அவர்களை கிராம மக்கள் கதர் ஆடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டும் நிகழ்வுகளை பார்வையிட்டவர்கள் தத்தம் கேமராக்களில் பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து தாரை தட்டப்படையுடன் மாடுகள் ஊரின் நடுவே உள்ள கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், கிராம மக்களோடு பறை இசைக்கு ஏற்றவாறு ஆடிப்பாடி மகிழந்தனர். அப்போது கிராமத்தில் உள்ள வயல்களை பார்வையிட்டவர்கள் " இயற்கை எழில் கொஞ்சும் அழகான ஊர், அன்பான மக்கள்" என வேங்கராயன்குடிக்காட்டுக்கு புகழாரம் சூட்டினர்.
இதனைத்தொடர்ந்து ஊரில் உள்ள தெருக்களை பார்வையிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், முதல்மாடு அவிழ்த்த கு.ஜெயபால், குழந்தைவேல் என்பவரது வீட்டுக்கு சென்று, அங்கு மாட்டுக்கு பொங்கல் வைத்து, மாடுகளுக்கு அதை ஊட்டி மகிழ்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் மற்றும் கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“