/tamil-ie/media/media_files/uploads/2022/11/New-Project19.jpg)
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் படங்களின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் நேற்று (நவம்பர் 20) மாலை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 91. பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பசி தீரும், புதிய பறவை, இரு மலர்கள், தெய்வ மகன், குடும்பம் ஒரு கோவில், தாய் சொல்லைத் தட்டாதே, ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா?, வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, திருமகள், பெண் என்றால் பெண் உள்ளிட்ட எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்த 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர்.
திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள தாஸ் என்ற பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். தமிழக அரசு சார்பில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2022-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது ஆரூர்தாஸ்க்கு வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரூர்தாஸ் இல்லத்திற்கு நேரடியாக சென்று விருதினை வழங்கி சிறப்பித்தார்.
இந்தநிலையில், சென்னை தி. நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரூர்தாஸ் வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை 6.40 மணியளவில் காலமானார். ஆரூர்தாஸ் உடல் இன்று (நவம்பர் 21) மதியம் 12 மணி வரை அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும், பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரூர்தாஸ் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.