Vethikumaran was expelled from NTK : நாம் தமிழர் கட்சியின் சீமானின் தென்மண்டல தளபதி என பாராட்டப்பட்டவர் வெற்றிகுமரன். தற்போது இவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இது அக்கட்சியில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தன்னை நீக்க சீமானுக்கு அதிகாரம் இல்லை என வெற்றிகுமரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ள அறிக்கையில், “பதவிக்காகவும், இன்ன பிற சுகத்திற்காக காத்துக் கிடப்பவன் தான் காலில் விழுந்து கிடப்பான். நான் நேர்மையானவன்.
யாரிடத்திலும் மண்டியிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உங்களிடம் இருந்து வரும் பதிலுக்காக காத்திருக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம். எல்லாம் தெரிந்த உங்களுக்கு நம் கட்சியின் விதிகள் தெரியாதது கவலை அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, “தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி விதிமுறைகளின்படி, என்னை நீக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது.
மாநிலப் பொறுப்பில் இருக்கும் என்னை பொதுக்குழுவை கூட்டித்தான் நீக்க முடியும். ஆகவே நாம் தமிழராகவே தொடர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ள சீமானுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் வெற்றிகுமரன். இவர், கடந்த சில மாதங்களாக கட்சியிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
அண்மையில் மதுரையில் கட்சி சீரமைப்பு பணிகளில் சீமான் பங்கேற்றபோதும் வெற்றிகுமரன் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது சர்ச்சையாக வெடித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“