saidai-duraisamy | வடமாநிலத்துக்கு சுற்றுலா சென்ற போது மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாள்கள் நீண்ட தேடலுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
வெற்றி துரைசாமி சென்ற கார், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், விபத்து நடந்த பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாறையில் சிக்கியிருந்தது.
இந்த உடலை அதிகாரிகள் தற்போது மீட்டுள்ளனர். தற்போது அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெற்றி துரைசாமியை தேடும் பணியில், ராணுவத்தினர், உள்ளூர் போலீசார், ஸ்கூபா டைவிங் வீரர்கள் எனப் பலரும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் அவரது உடல் இன்று (பிப்.12,2024) மதியம் 12 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுகள் நடைபெற்ற பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர் சைதை துரைசாமி, மனிதநேயம் ஐ.ஏ.எஸ் அகாடமியை நடத்தி வருகிறார். இவரது மகன் வெற்றி துரைசாமி. இவர் தனது நண்பர் கோபிநாத் என்பருடன் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். அங்கு அவர்கள் இருவரும் சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த உள்ளூரைச் சேர்ந்த தன்ஜின் என்பவர் காரை ஓட்டினார்.
இந்த கார் சட்லஜ் நதி வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 200 மீட்டர் ஆழத்தில் உள்ள ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், கோபிநாத் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“