த.வெ.க-வின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியைத் தொடங்கிவைத்து அந்த கட்சியின் தலைவர் விஜய் புதன்கிழமை உரையாற்றினார். சென்னை பனையூரில் நடந்த நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான ’மை டிவிகே’ என்ற பிரத்யேக செயலியை கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். செயலியில் ஒரு தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 5 பேரை சேர்க்கலாம். பொதுமக்களை த.வெ.க. உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு எந்த ஒரு ஒடிபி-யும் கேட்கபடாது என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசாரத்தின் கீழ் இந்த செயலியைப் பயன்படுத்தி உறுப்பினர்களை இணைக்க கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு போன்களில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து உறுப்பினராக இணைய மக்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாவது;
”தமிழக அரசியலில் 1967, 1977ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை போன்று 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் அமையப் போகிறது. இரு மாபெரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்றவர்கள் அதிகார பலத்தை எதிர்த்துதான் புதிதாக வந்தவர்கள் வென்றார்கள். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு சென்று அனைத்து மக்களையும் சந்தித்துதான் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
அண்ணா கூறியதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன், ”மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு” இதனை சரியாகச் செய்தால் போதும், வெற்றிப் பேரணியில் தமிழ்நாட்டின் கீழ் அனைத்து குடும்பத்தையும் உறுப்பினராக சேர்த்து நம்மால் வெற்றி பெற முடியும். இதன்பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என தொடர்ந்து மக்களுடன்தான் இருக்கப் போகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். வெற்றி நிச்சயம்.” எனத் தெரிவித்தார்.