வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமைச் செயலகம் வந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகிய இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள். டிடிவி தினகரன் ஆதரவாளர்களான இவர்கள் இருவரும் நேற்று தலைமைச் செயலகத்திற்கு வந்தனர். நெடுஞ்சாலைத் துறையின் டெண்டரில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறினர்.
வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தினர்.
வெற்றிவேலையும் தங்க தமிழ்செல்வனையும் உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இதையடுத்து வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்செல்வன் மீது சட்டப்பேரவை வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்தது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க கோரி வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரனைக்கு வர உள்ளது.