த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் குட்டிக் கதை ஒன்று கூறினார். அது இப்போது ட்ரெண்டாகி வருகிறது. ரஜினிகாந்த் பேசுகையில், "வேட்டையன் பட ஷூட்டிங் தொடங்க இரண்டு நாட்கள் இருக்கும். அப்போது ஞானவேல் என்னிடம் வந்து, சார் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார். புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் படத்தில் நடித்த மாதிரி நீங்கள் இப்போது நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள் என்றார்.
அப்போது எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது. அது, உத்திரகாசில், ஹிமாலயாஸில் டோபி ஒருத்தர் இருந்தார். அவர் துணி துவைக்க வேண்டுமென்றால் பெரிய பள்ளத் தாக்கில் இறங்கி அங்கு ஓடும் ஆற்றில் இறங்கி துணி துவைக்க வேண்டும். அவரிடம் இருக்கும் கழுதையில் துணி மூட்டையை வைத்துக்கொண்டு கீழே வந்து துணி துவைப்பார்.
அப்படி ஒருநாள் வந்து துணியை துவைத்துவிட்டு பார்க்கும்போது கழுதையை காணவில்லை. அந்த கழுதைதான் அவருக்கு உயிர், மூச்சு எல்லாமே. உடனே அவர் ஒருமாதிரி விரக்தி ஆகிட்டார்.
அவர் தன் வீட்டில் இருந்த மனைவி, குழந்தைகளை எல்லாம் மறந்து கழுதையை சேடித் சென்றார். கடைசியில் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்துட்டார். சில நாட்களில் இவர் மிகப் பெரிய ஞானி என்று அவருக்கு பல சிஷ்யர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர் எதையும் பேச மாட்டார்.
அவர் சைகையில் சொல்வதே நடப்பதாக அங்கிருந்தவர்கள் நம்பினர். ஊரே அவரை ஞானியாக போன்றி புகழ்ந்தனர். ஒருகட்டத்தில் அந்த டோபிக்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பவும் வர ஆரம்பித்தது.
அப்போது ஒரு கழுதை கத்தியது. உடனே அவர் எங்கே என் கழுதை எங்கே என் கழுதை என்று கத்தினார். அப்போது தான் சிஷ்யர்களுக்கு இவர் டோபி என்று தெரிந்தது. நீங்கள் இப்போது ஞானி என்று கூறி அவரை அமைதியாக்கினர் என்றார்.
இதை கேட்டஞானவேல் என்னிடம், ஏன் சார் இதை என்னிடம் சொல்றீங்க என்று கேட்டார். உடனே நான் அவரிடம், அந்த டோபியை போல தான் நானும். தளபதி படத்தில் ஓ.கேயான ஷாட்டை மட்டும்தான் நீங்க பார்ப்பீங்க. அதுக்கு பின்னாடி எத்தனை டேக் போச்சுனு எனக்கு மட்டும்தான் தெரியும்.
அதே மாதிரி முள்ளும் மலரும் படத்தில் மகேந்திரனும் பாலுமகேந்திராவும் சேர்ந்துதான் என்னை அப்படி செய்ய வைத்தார்கள். புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் 11 பக்க டயலாக்கை ஒருநாளுக்கு கொடுப்பார்கள். நான் மிரண்டுவிட்டேன்.
பிறகு முரட்டுக்காளை, போக்கிரி ராஜா அப்டிங்ற லைன்ல போய் பிழைத்துக் கொண்டேன். அதனால் என்னை புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை மாதிரி நடிக்க வைக்க எதிர்பார்க்காதீங்க. வழக்கமா எப்படி நடிக்கிறேனோ அப்படியே நடிக்கிறேன்" என்று ரஜினி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“