vettavalam jameen maragathalingam : 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விலையுர்ந்த ஜமீன் கோயில் சிவலிங்கம் தற்போது குப்பையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வேட்டலம் ஜமீன் கோட்டை வளாகத்தில் உள்ள மனோன்மணியம்மன் கோவிலில் இருந்த மரகத லிங்கம் திருடப்பட்டது. ரூ.5 கோடி மதிப்புள்ள பச்சை நிற மரகதலிங்கம், அதிகாலை பூஜைகள் நடத்த கோவில் நடையைத் திறந்தபோது திருடப்பட்டது தெரியவந்தது. கோவிலின் பின்பக்க சுவரைத் துளையிட்டு மரகத லிங்கத்தை யாரோ திருடிச் சென்றிருக்கின்றனர். அதனுடன் அம்மனின் ஒரு கிலோ வெள்ளி கிரீடம், வெள்ளி பாதம், தங்கத்தாலி போன்ற நகைகளும் திருடு போனது.
அதன்பிறகு வேட்டலம் போலீசார் நடத்திய விசாரணையில் எந்தவிதமான தகவலும் கிடைக்காததால் இந்த வழக்கை பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜமீனில் பணிபுரியும் பணியாளர்கள், கோவில் நிர்வாகிகள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் லிங்கம் கிடந்ததாக ஜமீன் ஊழியர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்ததும் அதிகாரிகள், ஜமீன் மகேந்திர பந்தாரியர், கோவில் குருக்கள் ஆகியோரிடம் விசாரித்தப் பிறகு இது திருடப்பட்ட மரகத லிங்கம்தான் என உறுதி செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் முன்பு தொலைந்து போன லிங்கத்தை யார் தற்போது அங்கே போட்டது என்பது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த லிங்கம் இதற்கு முன்பே 1986-ஆம் ஆண்டு இதேபோல திருடப்பட்டு பின் ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள் ஜமீன் வளாகத்தில்.