கோவை சிங்காநல்லூரில் உள்ள வி.ஜி.எம் மருத்துவமனையில் புதிதாகக் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் தொடக்க விழா அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கல்லீரல் நிபுணரும், பேராசிரியருமான டாக்டர் அருண் சன்யால், பிரேசிலை சேர்ந்த கல்லீரல் நிபுணர் லூரியான் நாக்சிமென்டோ கேவல்காண்டே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.
நிகழ்வில் பேசிய டாக்டர் அருண் சன்யால், இந்தியாவில் ஆண்டுதோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்லீரல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாகவும், ஆனால் அவர்களில் 3,500 முதல் 4,000 பேருக்கு மட்டுமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும் கவலையுடன் தெரிவித்தார். இதுபோன்ற மாற்று அறுவை சிகிச்சை மையங்களின் தேவை இந்தியாவில் மிக அதிகம் என்பதை உணர்த்துகிறது என்றார். பிரேசில் நிபுணர் லூரியான் நாக்சிமென்டோ கேவல்காண்டேவும் இந்த மையத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்தியா முழுவதும் மெடபாலிக் சிண்ட்ரோம் மற்றும் கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவதாக வி.ஜி.எம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கு அதிக சத்து உணவு, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்றவையே முக்கிய காரணங்கள் என குறிப்பிட்டார். இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், வி.ஜி.எம் மருத்துவமனையில் 'லிவர் ப்ளாக்' என்ற புதிய சிகிச்சைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தப் பிரிவு, இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்புப் பிரிவு என அனைத்து நவீன வசதிகளுடன் தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையங்கள் அதிகமாகத் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.