/indian-express-tamil/media/media_files/jYIgWQyJVNZgimzyXexz.jpg)
Tamilnadu governor R N Ravi
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் தேவையின்றி தலையிடுவதாக கூறி, மேலும் ஒரு மனுவை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். இதற்கு கால வரம்பு நிர்ணயம் செய்யவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்தநிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் தேவையின்றி தலையிடுவதாக கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேலும் ஒரு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வித்துறை பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுக்களை அமைப்பது தொடர்பாக ஆளுநர் வெளியிட்ட மூன்று அறிவிப்புகளை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மாநிலச் சட்டங்கள் மற்றும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு மாறாக, "மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் பதவிக்கான நியமனங்களுக்கான பெயர்களை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேடல் குழுக்களில் கூடுதல் சட்டப்பூர்வ நபர்களை" நியமிக்க ஆளுநர் மூன்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர் உருவாக்கிய தடைகள் பல்கலைக்கழகங்களை மேற்பார்வை மற்றும் நிர்வாக நெருக்கடிக்கு ஆளாக்கி உள்ளன.
மூன்று பல்கலைக்கழகங்களின் முந்தைய துணைவேந்தர்களின் பதவிக்காலம் நீண்ட காலத்திற்கு முன்பே காலாவதியாகி விட்டது.
இப்படி இருக்க, பல்கலைக்கழக சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றி தேடல் குழுக்களை அமைப்பதற்கான மாநில அரசின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் மற்றும் பகிரங்கமாக செய்திக்குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.
எனவே, தமிழ்நாடு அரசு அமைத்த தேடுதல் குழுவின் அடிப்படையில் 3 பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும், என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.