வாடகைக்கு 18 சதவீதம் வரி, கட்டிடங்களுக்கு 6 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளத்தை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி வரும் 11ம் தேதி தமிழகம் தழுவிய வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
பெரம்பலூரில் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் மழைநீர் சேமிக்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தவேண்டும். பெரம்பலூர் பகுதியில் ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் வலியுறுத்தும்.
வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பை திரும்ப பெற வலியுறுத்திய நிலையிலும், கட்டிடங்களுக்கு கூடுதலாக 6 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. உரிமம் கட்டணமும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. குப்பை வரி மாவட்ட வரியாக வேறுபடுகிறது.
எனவே, கடை வாடகை மீதான 18 சதவித ஜி.எஸ்.டி.,யை திரும்ப பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் வணிக உரிமைக் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறவேண்டும். குப்பை வரியை மாநிலம் முழுவதும் சீராக்க வேண்டும் என்பன உள்பட வரி சுமையை குறைக்க தமிழக அரசை வலியறுத்தி வரும் 11ம் தேதி தமிழகம் தழுவிய வகையில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்வதில்லை. தடை செய்யப்பட்ட பொருட்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறோதா அங்கேயே தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வணிகர்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் செயல்படும் அரசுக்கு ஆதரவு அளிப்போம். தமிழக அரசு எங்களது ஒரு சில கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றி வருகிறது. வரும் டிசம்பர் 17-ம் தேதி திருச்சியில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. வரும் மே 5-ம் தேதி நடைபெறும் வணிகர் தின விழா மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது என தெரிவித்தார். பேட்டியின்போது மாநில பொதுசெயலாளர் கோவிந்தராஜூலு, கூடுதல் செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“