உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் லெட்சுமண சந்திர விக்டோரியா கவுரி பெயர் பரிந்துரை செய்யப்பட்டதற்கு, மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், எதிர்ப்பை மீறி விக்டோரியா கவுரி உள்பட 5 புதிய நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதியபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு பெயர் பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பெயர் பட்டியலில், இடம் பெற்றிருந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி பா.ஜ.க தேசிய மகளிரணி பொதுச் செயலாளராக இருந்தவர் என்றும் அவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் 21 பேர் கையெழுத்திட்டு குடியரத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும் கொலீஜியத்தும் மனு அனுப்பினர்.
மேலும், பா.ஜ.க-வில் பொறுப்பாளராக இருந்த விக்டோரியா கவுரி இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய வெறுப்பு பேச்சு யூடியூபில் உள்ளது. இவரை நீதிபதியாக நியமித்தால் ஒரு சார்பாக செயல்படுவார் என்று அந்த மனுவில் வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்தனர். அதனால், விக்டோரியா கவுரியை நிதிபதியாக நியமனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
விக்டோரியா கவுரியை நிதிபதியாக நியமனம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களின் எதிர்ப்பையும் மீறி விக்டோரியா கவுரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விக்டோரியா கவுரி உள்பட 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய அரசியலமைப்பின் கீழ் தொடர்புடைய விதிகளின்படி, அலகாபாத் உயர்நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக பின்வரும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக லட்சுமண சந்திர விக்டோரியா கவுரி, பிள்ளைபாக்கம் பாஹுகுடும்பி பாலாஜி, கந்தசாமி குழந்தைவேலும் ராமகிருஷ்ணன், ராமச்சந்திரன், கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களின் எதிர்ப்பையும் மீறி வழக்கறிஞர் விக்டோரியா கவுரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“