முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தினர்.
முந்தைய அதிமுக ஆட்சியில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி. வீரமணி தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தார். கே.சி. வீரமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், அவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (செப்டம்பர் 16) காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
கே.சி.வீரமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று சோதனை மேற்கொண்டனர்.
அதே போல, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குருவிமலை கிராமத்தில் உள்ள அவருடைய உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். கே.சி. வீரமணியின் உதவியாளரும் அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான சியாம்குமாரின் அரக்கோணம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் வில்வநாதன் தலைமையில் 6 அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெறுவதால் வீட்டின் அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது.
முன்னதாக, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவர்கள் தொடர்புடய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. தற்போது, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவர் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையில் ரூ. 34 லட்சம் பணம், ரூ.1.80 லட்சம் வெளிநாட்டு பணம், 623 சவரன் தங்க நகைகள், 7.2 கிலோ வெள்ளி, ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“