க. சண்முகவடிவேல், திருச்சி
திருச்சி நீதிமன்றம் அருகே பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசனத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், உதவி பொறியாளராக கந்தசாமி மற்றும் சிறப்பு பொறியாளராக மணிமோகன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
சமீபகாலமாக தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன துறையில் பயனாளர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிக அளவில் புகார்கள் வந்தன.
இந்நிலையில் இன்று திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் அதிரடியாக ஏரி மற்றும் ஆற்றுப் பாசனத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது, ஊழியர்கள் அனைவரையும் அலுவலகத்தினுள்ளே இருக்க உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், உதவி பொறியாளர் கந்தசாமி மற்றும் சிறப்பு பொறியாளர் மணிமோகன் ஆகியோர் ஒப்பந்ததாரர்கள் மூலம் பெறப்பட்ட கணக்கில் காட்டப்படாத ரூ.31 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணையில் நடத்தி வருகின்றனர். மேலும், திருவானைக்காவல், ராஜா காலனியில் உள்ள அவர்களது இல்லங்களிலும் சோதனைது நடைபெற்று வருகிறது.
திருச்சி நீதிமன்றம் அருகே பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசனத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”