திருச்சியில் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் பெண் எஸ்.ஐ மீது லஞ்சப் புகார் எழுந்த நிலையில், அவருடைய இரு சக்கர வாகனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடதிய சோதனையில் ரூ. 5 லட்சம் சிக்கியது.
கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார்.
இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் 2023-ல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணையில் இருந்து அவரை விடுவிக்க விபச்சார தடுப்பு பிரிவு பெண் உதவி ஆய்வாளர் லஞ்சம் பெற்றதாக இன்று நண்பகல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரிடம் டி.எஸ்.பி மணிகண்டன் உள்ளிட்டோர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், விபச்சார தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரமாவின் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அவர் பயன்படுத்தி வந்த ஸ்கூட்டர் வாகனத்தின் இருக்கையின் கீழ் ரூபாய் 5 லட்சத்து 40 ஆயிரம் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
அந்தப் பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அப்பணம் பற்றி ராமாவிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின்னாக முரணான தகவல் கூறியதால் அந்த பணம் ஸ்பா சென்டர் உரிமையாளர்களிடமிருந்து லஞ்சமாக பெற்ற பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ரூபாய் 5 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் கடந்த சில மாதங்களாக ஸ்பா என்ற பெயரில் சில இடங்களில் கொடிகட்டி விபச்சாரம் நடைபெற்றது காவல் ஆணையர் சத்திய பிரியாவின் தனிப்படையினர் மூலம் கண்டறிந்து அது தொடர்பான காவல் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்த நிலையில் விபச்சார தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரமா லஞ்ச வழக்கில் இன்று சிக்கி இருப்பது காவல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"