vijayakanth: நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
Advertisment
விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்த் உடல், சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அவரது உடலை ஏற்றி வந்த வாகனம், சுமார் 2 மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் மெல்ல ஊர்ந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகம் வந்தடைந்தது.
வழிநெடுக சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். தற்போது கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்த்தின் மறைவு பேரிழப்பு என்றும், அதனை எவராலும் ஈடுகட்ட முடியாது என்றும் கூறி தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது மறைவு நாளான இன்று பொதுவிடுமுறை தமிழகம் முழுதும் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
விஜயகாந்த் குறித்து ஒரு தொண்டர் பேசுகையில், "எனக்கு திருமண செய்து வைத்து அவர் தான். எனது திருமணத்துக்கு காலை 5 மணிக்கே வந்து தாலி எடுத்து கொடுத்தார். என் பொண்ணுக்கு உடலநிலை சரியாமல் இருந்த போது 3 லட்சம் பணம் கொடுத்தாரு. பொண்ணு திருமணத்துக்கு அண்ணியும், பிரபாகரனும் வந்தனர். அவரை இழந்தது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. எனது குடும்பமே வேதனையில் உள்ளனர். நான் பண்ணுறதுன்னே எனக்கு தெரியல." என்று கூறினார்.
விஜயகாந்த் மறைவு குறித்து அஞ்சலி செலுத்தும் இடத்தில்திரண்டித்திருந்தவர்களில், தங்களது குல தெய்வத்தை இழந்து விட்டதாகவும், அவர் தான் கடவுள், 'என் தெய்வம் போயிருச்சே, எங்க அப்பா இறந்து போது கூட நான் அழவில்லையே' என்று கண்ணீர் மல்க கூறி வருகிறார்கள். 'கடவுளை நாங்க பார்த்தது இல்ல, எங்க கேப்டன் தான் கடவுள்' என்று கூறி கண்ணீர் சிந்தி வருகிறார்கள்.