திரைப்பட தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் விஜய்யுடனான உறவில் உள்ள சிக்கல் குறித்தும், சமீபத்தில் அவரை பேட்டி எடுத்த ஒரு தமிழ் வார இதழில் அவர் சொல்லாத தவறான தகவலை வெளியிட்டதை மறுத்தும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோவில் பேசியதாவது, வார இதழ் ஒன்றில் என்னுடைய பேட்டி வந்துள்ளது. அதில் நான் கூறியது தான் வந்துள்ளது. அவர்கள் என்னைப் பற்றியும், என்னுடைய படங்களை பற்றியும் கேட்டிருந்தார்கள். மேலும் என்னுடைய நான் கடவுள் இல்லை படத்தைப் பற்றியும் விஜயகாந்த் குறித்தும் கேட்டிருந்தார்கள். எல்லாவற்றையும் குறித்து நான் வெளிப்படையாக பேசியிருந்தேன்.
அதேநேரம், என் குடும்பத்தைப் பற்றிக் கேட்கும்போது, நான் சொல்லாத தவறான ஒரு விஷயம் அதில் வந்துள்ளது. நானும் என் மனைவி ஷோபாவும் விஜய் வீட்டுக்கு வெளியில் காத்திருந்ததாகவும், விஜய் ஷோபாவை மட்டும் உள்ளே வரச் சொல்லுங்க என சொன்னதாகவும், இதனால் நாங்கள் இருவருமே திரும்பி வந்துவிட்டதாகவும், ஒரு தவறான செய்தி வந்துள்ளது. அது உண்மையல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மை. அதை எப்போதும் மறுக்க மாட்டேன். ஆனால் விஜய்யும் அவரது தாயும் என் மனைவியுமான ஷோபாவும் எப்போதும் பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் எந்த மனகசப்பும் இல்லை, அவர்கள் சந்தோஷமாக சந்திந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஷோபா விஜய் வீட்டு வாசலில் காத்திருந்ததாக வார இதழில் வந்த தகவல் தவறு என்பதை நான் பதிவு செய்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார்.
விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையிலான சண்டையின் முக்கிய காரணமாக அவர்களின் அரசியல் பயணம் இருப்பதாக தெரிகிறது. தேர்தல் அரசியலில் சேருவதற்கான தனது விருப்பத்தை விஜய் மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் தனது அரசியல் விருப்பங்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயின் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முயற்சித்து, விஜய்யின் கண்டனத்திற்கு ஆளானார்.
விஜய் தனது தந்தையின் அரசியல் நகர்வுகளிலிருந்து விலகி ஒரு பொது அறிக்கையை வெளியிட்டார். மேலும் அரசியல் பிரச்சாரங்களில் தனது பெயரைப் பயன்படுத்தியதற்காக அவர் தனது பெற்றோர் மற்றும் அவரது ரசிகர் மன்றத்தின் மற்ற நிர்வாகிகள் மீது நீதிமன்ற வழக்குத் தொடர்ந்தார்.
சமீபத்திய தகவல்களின்படி, சந்திரசேகர் இந்த வழக்குக்கான பதிலில், இந்த ஆண்டு பிப்ரவரியில் தான் விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்து விட்டதாகக் கூறினார், மேலும் அது ஒரு அரசியல் கட்சியாக இல்லாமல் ஒரு ரசிகர் மன்றமாக செயல்படும் என்றும் கூறினார்.
இதற்கிடையில், விஜய் தனது வரவிருக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.