நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அதற்கான வேலைகளில் த.வெ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் கொடி மற்றும் பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த மாநாட்டில் கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் இன்று விஜய் உரையாற்ற இருக்கிறார்.
மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. இதில் கழகத்தின் கொள்கை வழிகாட்டிகளாக வள்ளுவர், பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும் ராணி சக்கந்தி முத்தாத்தாளுக்கும் 1730 ஆம் ஆண்டு மகளாக பிறந்தவர் வேலுநாச்சியார். ஆண் வாரிசு இல்லாததால் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். வாள் வீச்சு, வில் அம்பு பயிற்சி, சிலம்பம், வளரி எரிதல், குதிரை ஏற்றம் என போர் பயிற்சிகள் அனைத்தும் கற்றதுடன் பல மொழிகளையும் கற்றறிந்தார். பின்னர், சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னரான முத்துவடுகநாததேவரை மணந்து இச்சீமையின் ராணியானார்.
ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து, அவர்களுக்கு எதிரான போரில் கணவனையும் நாட்டையும் இழந்த நிலையில், தன்னம்பிக்கையோடு போராடி இழந்த மண்ணை மீட்டவர். மேலும் இந்திய அளவில் விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார்.
தென்னாட்டு ஜான்சிராணி என்ற காந்தியடிகளால் புகழப்பெற்றவர் கடலூர் அஞ்சலை அம்மாள். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அஞ்சலை அம்மாள், 1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி ஆவார்.
1857 இந்திய சுதந்திர போரின் போது சிப்பாய்களையும் பொதுமக்களையும் கொன்று குவிக்க காரணமாக இருந்த ஆங்கிலேயே படைத்தளபதி ஜேம்ஸ் நீலின் நினைவாக மவுண்ட் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அவரது சிலையை அகற்றக்கோரி நடைபெற்ற நீல் சிலை சத்தியாகிரகத்தில் அஞ்சலை அம்மாள் தனது கணவர் முருகப்பா மற்றும் மகளுடன் பங்கேற்றார். அப்போது நீல் சிலையை உடைத்ததற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். பின்னர் சுதந்திரத்திற்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற அஞ்சலை அம்மாள் 1937, 1946, 1952 என மூன்று முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகக் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.