தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிதாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அக்கட்சி தலைவர் விஜய் பிறப்பித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வி. சாலையில் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இதைத் தொடர்ந்து, கட்சியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் நிர்வாகிகளுடன் இணைந்து விஜய் செயலாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை நேரில் சந்தித்து விஜய் உரையாற்றினார். அப்போது, தனது கள அரசியல் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இருந்து தொடங்குகிறது என அவர் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் (ஜன 24) சென்னை, பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் புதிய நிர்வாகிகள் நியமன கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளையும் 120 நிர்வாக மாவட்டங்களாக பிரித்து கட்சி பணி ஆற்றும் விதமாக முடிவு செய்யப்பட்டது. மேலும், இதற்காக மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டார். இதில் முதல் கட்டமாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய விஜய், "கட்சியில் வலிமையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் நம்முடைய இலக்கு. உங்கள் அனைவரையும் நம்பியே கட்சியை தொடங்கி இருக்கிறேன். மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.