ஃபீஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகள் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, உள்ளிட்டோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.
அதே போல, எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதே போல, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மரக்காணம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க களத்திற்கு வராதது ஏன் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்காமல், ஏற்கெனவே மழையால் பாதிக்கப்பட்ட மக்களை, விஜய் பல கி.மீ தூரம் பயணம் செய்ய வைத்து அழைத்து வந்து நிவாரணப் பொருட்கள் வழங்கியது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் இடத்துக்கே நேரில் சென்று சந்தித்து நிவாரணப் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்காதது ஏன் என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை நேரில் வந்து வழங்காதது ஏன் என்பது குறித்து நிவாரணம் பெற்றவர்களிடம் பேசிய த.வெ.க தலைவர் விஜய், “உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால், உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது. அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது. நேரம் செலவிட முடியாது. நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.