விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்று வருகிறது. த.வெ.க மாநாடு தொடங்கியது, மேடைக்கு வந்த விஜய் மேடையில் இருந்து ‘ரேம்ப் வாக்’ செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
பின்னர், த.வெ.க மாநாட்டு மேடையில், அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, த.வெ.க தலைவர் விஜய்க்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. விஜய்க்கு நினைவுப் பரிசுகளாக வெள்ளி வாள், அரசியல் சாசனம் புத்தகம், திருக்குறள், பகவத் கீதை, பரிசுத்த வேதாகமம், திருக்குர்ஆன் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, விஜய் த.வெ.க முதல் மாநாட்டில் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் பேசிய விஜய், திராவிட மாடல் என்கிற பெயரில் மக்கள் விரோதா ஆட்சி நடைபெறுவதாக தி.மு.க-வை நேரடியாகத் தாக்கிப் பேசினார்.
பெரியார் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் என்று கூறிய நடிகர் விஜய், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப்போவதில்லை, அதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை என்று கூறினார். மேலும், யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை என்று கூறினார்.
தொடந்து பேசிய விஜய், அரசியல் அடிச்சுவடியை அறிமுகப்படுத்திய அறிஞர் அண்ணா கூறிய ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே எங்களின் நிலைப்பாடு என்று கூறினார்.
“பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, உங்களுக்காக நான் வருகிறேன்” என்று கூறிய விஜய், அரசியல் எதிரிகள் குறித்துப் பேசினார்.
தனது அரசியல் எதிரிகள் குறித்து த.வெ.க விஜய் பேசுகையில், “நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத சக்திகள், நம்முடைய இன்னொரு எதிரி ‘கரப்ஷன்’ (corruption) கடபடதாரிகள்” என்று பேசினார்.
த.வெ.க முதல் மாநில மாநாட்டில் பேசிய ட்விஜய், “இங்கே சிலர் பாசிசம், பாசிசம் என்று பேசுகிறார்கள், அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு பேரறிஞர் அண்ணா, பெரியார் பெயரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற சுயநல கூட்டம்தான் நம்முடைய அரசியல் எதிரி” என்று விஜய் தி.மு.க-வை நேரடியாகவே தாக்கிப் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“