Advertisment

நீங்கள் பிரபலம்தான்; மக்களுக்கு பிரியமானவரா விஜய்?

வீடுகள் தோறும் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதில் பெரிய விழுக்காடு ஓட்டுரிமையற்ற குழந்தைகள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

author-image
WebDesk
New Update
Vijay chose policy from Thirukkural and Indirect attack on Dravidian parties BJP Tamil News

வீடுகள் தோறும் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதில் பெரிய விழுக்காடு ஓட்டுரிமையற்ற குழந்தைகள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கட்டுரையாளர்: அதங்கோடு கலாதரன்

Advertisment

தூரத்தில் மினுக்கிக் கொண்டிருக்கிற நட்சத்திரம் ஒன்று மெல்ல மெல்ல உங்களை நோக்கி வருவதாக உணர்கிறீர்கள்; இது பிரம்மையா, நிஜமா என பிரித்தறிவதற்குள் அந்த நட்சத்திரம் உங்களை நெருங்கி விடுகிறது. நான்தான் அந்த நட்சத்திரம்; இனி உங்கள் கை விளக்காக என்னை வைத்துக் கொள்ளலாம் என்றால் நீங்கள் பிரமித்துப் போவீர்கள்தான். அதேநேரம், கை பழகிய விளக்கை விட கண் பழகிய இருட்டு பரவாயில்லை என நீங்கள் விலகிச் செல்வீர்கள் என்பதுதான் உண்மை; அதுதான் யதார்த்தமும் கூட.

அப்படியொரு நட்சத்திரம் 1989 ம் வருட வாக்கில் வானிறங்கி வந்தது. நட்சத்திரத்தின் பெயர் சிவாஜி கணேசன். கொடுத்துச் சிவந்த கரத்துக்குச் சொந்தக்காரரான எம்.ஜி.ஆருக்கு இணையாக, நடிப்பில் ஒரு படி மேலே என பாரக்கப்பட்ட அவர் தமிழக முன்னேற்ற முன்னணி என்றொரு கட்சியை ஆரம்பிக்கிறார்.

எம்.ஜி.ஆர் இல்லாத இடைவெளியை உங்களது பிம்பம் இட்டு நிரப்புமென சொன்னது வி.கே ராமசாமியா மேஜர் சுந்தர்ராஜனா என தெரியாது. அதுவரையில் காங்கிரஸ் கட்சி அனுதாபியாக பார்க்கப்பட்ட சிவாஜி கணேசன் தனிக்கட்சி தொடங்கி தலைவராகிறார். ஹைப்பர் மார்க்கெட்டுக்கு காவலாளியாக இருப்பதை விட பெட்டிக் கடைக்கு முதலாளியாக இருப்பது மேல் என்பதைப் போல.

கரன்சி நோட்டு கொளுத்தி அடுப்பெரித்தால் கூட ஏழேழு தலைமுறைக்கு சமையல் செய்கிற அளவுக்கு சம்பாதித்த சிவாஜி கணேசன் சொல்லிக் கொள்ளும்படி ஏழைகளுக்கு எதுவும் செய்ததாக தகவல் இல்லை.

எனவே, கட்சி தொடங்கும் வரை நட்சத்திரமாக மட்டுமே இருந்த சிவாஜி அரசியல்வாதியாக வீடு தேடி வந்து கை குலுக்கியதை நடிப்பென்றே நம்பியது தமிழ்நாடு.

எப்போதுமே நாற்காலியை நாம் தேடிப் போய் உட்காரக் கூடாது; தலைமை நாற்காலி என்பது நம்மைத் தேடி வர வேண்டும். அதற்கான முன் தயாரிப்பு தன்னை பிரபலமானவராக ஆக்கிக் கொள்வதல்ல; வெகுஜன மக்களுக்கு பிரியமானவராக ஆக்கிக் கொள்வது. எம்.ஜி.ஆர் செய்தது அதைத்தான். சிவாஜி செய்யத் தவறியதும் அதைத்தான்.

இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ் சினிமா நடிகர்கள் பலர் கட்சி ஆரம்பித்தாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க.,வே இப்போது பின்னடைவை சந்தித்திருக்கிறது.

இந்தச் சூழலில் பலரது புருவத்தை உயரச் செய்திருக்கிறார் தமிழ்நாட்டின் பிரிய நட்சத்திரமான விஜய்.

தமிழ்சினிமாவின் ஒற்றை சூப்பர் ஸ்டாராக கோலோச்சிக் கொண்டிருக்கும் ரஜினியைப் போல இதோ வருகிறேன், இப்போதே வருகிறேன் என்று அரசியல் தளத்தில் ரசிகனை அலைய விடாமல், இதோ வந்து விட்டேன் என்று வந்து நிற்கிறார் மனிதர்.

மதப் பிரிவினையற்ற, ஊழல் கறைபடியாத தமிழ்நாட்டு அரசியலை கட்டமைக்கப் போவதான முழக்கத்துடன் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்ததாக சொல்கிற விஜயின் அரசியல் பிரவேசத்துக்கான காரணம் உள்ளபடி அதுதானா?

அ.தி.மு.க, தி.மு.க ஆட்சிக் காலங்களில் அவரது படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காகவும், படம் திரையிடுகிற காட்சி நேரம் தொடர்பாகவும் சில சிக்கல்கள் எழுந்தன.

இவை அனைத்துமே விஜயின் வளர்ச்சியை தடுப்பதற்கான முட்டுக்கட்டையென பேச்சு எழுந்தது. அப்போது விழுந்த பொறி, கனலாகி தீயாகி மூண்டிருக்கிறது இப்போது.

சராசரி மனிதத் துயரறியாத வசதியான வாழ்க்கை விஜய்க்கு வாய்த்தது. ஆனாலும், அவரது பட கதாபாத்திரங்கள் சாதாரண மனிதனுக்காக துடிப்பதாக அவர் அமைத்துக் கொண்டார்

சினிமாவில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும், நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக்கொண்டு செய்த கேளிக்கை மட்டுமே. பிறகெப்படி அவர் நடித்த கதாபாத்திரத்தைக் கொண்டு அவரை அளப்பது? அற்புதம் நிகழும் என எதிர்பார்ப்பது?

மக்களுக்காக அவர் பொதுத் தளத்தில் இதுவரை ஒற்றை வார்த்தை பேசியதில்லை. குறைந்தபட்சம் கோபத்தோடு ஒரு கேள்வியாவது கேட்டுருப்பாரா என்றால் அதுவும் இல்லை.

வீடுகள் தோறும் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதில் பெரிய விழுக்காடு ஓட்டுரிமையற்ற குழந்தைகள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

2026 தனது இலக்கு என்கிற விஜய் , இங்கே ஆங்கார  கிளை பரப்பி நிற்கும் திராவிட கட்சிகள் உட்பட தமிழ்நாட்டு மக்களின் இதயத்துக்கு நெருக்கமான கட்சிகளை ஒரேயடியாக சாய்க்க முடியும் என நம்புகிறார்.

சினிமாவில் எல்லாமே சாத்தியம்! நிஜத்தில்????

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment