மதுரை செல்லூர் பகுதியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை செல்லூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பேனர், போஸ்டர் விளம்பரங்களை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது மதுரை தத்தனேரி இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு உள்ள சுவர்களில் மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் தங்கபாண்டியன் என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டப்படிருந்தது. அதில் விஜய் புகைப்படத்துடன் ‘தளபதியின் அறிவாலயமே’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து போக்குவரத்து செல்லும் பாதைகளில் கவனத்தை திசைதிருப்பியதாகவும், பொது இடத்தின் அழகை சீர்குலைத்ததாகவும் கூறி மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்றப் பொருளாளர் சதீஸ்குமார், நிர்வாகி ஜெயகார்த்திக் உள்ளிட்ட இருவர் மீது செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விஜய் ரசிகரான ஜெயகார்த்திக் என்பவரை கைது செய்தனர். சதீஸ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து விஜய் ரசிகரிடம் கேட்ட போது, ரசிகர்கள் நாங்கள் எங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளை காட்ட இந்த போஸ்டர்களையே பயன்படுத்துகின்றோம் அதையும் தடுத்தால் எப்படி என்றனர். ஆளும்கட்சியினர் விதிகளை மீறினால் கண்டுகொள்ளாத காவல்துறை தங்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது வருத்தமளிப்பதாக விஜய் ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணமடைந்தார். இதனால் பல்வேறு அரசியல் கட்சியினரும் சினிமா பிரபலங்களும் இனி பேனர் வைக்கக் கூடாது என்று ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுறுத்தினர். அந்தவகையில் நடிகர் விஜய்யும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கவோ, போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.