IT Raid Vijay: விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் அதிக சம்பளம் வாங்கி அதற்கான வரியை முறையாகச் செலுத்தவில்லையென்ற புகாரின் அடிப்படையில் அவரிடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். நெய்வேலியில் 'மாஸ்டர்' படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தச் சென்ற போது, 'படப்பிடிப்பு முடிந்ததும் நானே நேரில் வருகிறேன் 'என்று அதிகாரிகளிடத்தில் விஜய் கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், உடனடியாகத் தங்கள் காரில் ஏறி வர வேண்டுமென்று கெடுபிடி காட்ட, அவர்களது காரிலேயே நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
Advertisment
இதையடுத்து, பனையூரில் உள்ள விஜய் வீட்டில் இரவு முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "5.2.2020 தேதியன்று, தமிழ் திரை உலகத்தைச் தயாரிப்பாளர், பிரபல நடிகர், விநியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகிய நான்கு பேருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவர்களது சமீபத்திய 300 கோடி வசூலான சூப்பர் ஹிட் படம் ஒன்று குறித்த விசாரணைக்காக சோதனை நடத்தப்பட்டது. சென்னை மற்றும் மதுரையில் இவர்கள் அனைவருக்கும் தொடர்பான இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக, சென்னை மற்றும் மதுரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பைனான்சியருக்கு தொடர்புடைய கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான ஆவணங்கள், நோட்டுகள், செக் போன்றவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் நடைபெறும் இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத தொகை ரூ.300 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகை குறித்த ஆவணங்கள், நடிகருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த ஆவணங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
நடிகரைப் பொறுத்தவரை, அவரின் அசையா சொத்துகள் குறித்த விவரமும், படத்திற்காக அவர் வாங்கப்பட்ட சம்பளம் குறித்தும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.