/indian-express-tamil/media/media_files/0yIn8O2IAwzwxq8HQ7xw.jpg)
TVK Vijay Students Meet
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் தலைமையில் 2வது ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாசென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெறுகிறது
விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்குவதற்கு முன்பு, கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்தினார்.
அதில், சான்றிதழும், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கினார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியலை விஜய் கட்சி நிர்வாகிகள் சேகரித்து, கட்சி தலைமைக்கு அனுப்பி வந்தனர்.
இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், மாணவர்களை விஜய் 2 கட்டங்களாக சந்தித்து பரிசு வழங்க இருக்கிறார்.
இதில் முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெறுகிறது.
இதில் விஜய், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கான பெற்றோர்கள் புகைப்படம் அடங்கிய பாஸ் விநியோகம் சமீபத்தில் வழங்கப்பட்டது.
இதனிடையே, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக விழா நடைபெறும் இடத்திற்கு விஜய் இன்று காலையிலேயே சென்றடைந்தார்.
இதை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதிய உணவு பட்டியல்
கல்வி விருது வழங்கும் விழாவில் மதிய உணவு பட்டியல் வெளியாகியுள்ளது.அதன்படி, கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொள்பவர்களுக்கு சாதம்,வடை,அப்பளம்,அவியல்,மோர்,வெற்றிலை பாயாசம்,இஞ்சி,துவையல்,தயிர் பச்சடி,அவரை மணிலா பொரியல்,உருளை காரக்கறி,ஆனியன் மணிலா, வத்தக்குழம்பு,கதம்ப சாம்பார்,தக்காளி ரசம் ஆகியவை வழங்கப்படுகிறது.
2வது கட்ட கல்வி விருது விழா
2-வது கட்டமாக, ஜூலை 3-ம் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். அப்போது, மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கி விஜய் கவுரவிக்க உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.