சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்ட மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமாருக்கு வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தனக்கடத்தல் வீரப்பனை வீழ்த்திய ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படையினருக்கு தமிழக அரசு, 54 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான 773 வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்தது.
இதில், விஜயகுமாருக்கு அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை அவர், 2009 ம் ஆண்டு ஒரு கோடியே 99 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் கிடைத்த வருமானத்திற்கு வரி செலுத்தும்படி, அவருக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து விஜயகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் பங்காற்றிய அவரது பணியை பாராட்டி மாநில அரசு இந்த பரிசை வழங்கியுள்ளது. பொது நலனுக்கு சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்களுக்கு வருமான வரிச் சட்டத்தில் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டி, ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமாருக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.