பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் தொடங்கி உள்ளார். கடந்த ஜூலை 28-ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபயணம் தொடங்கிய அவர் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை வழியாக தற்போது மதுரை வந்தடைந்துள்ளார். 168 நாட்கள் ஜனவரி 11-ம் தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மதுரையில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்க கொடியுடன் அண்ணாமலை நடைபயணத்தில் சிலர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்புத் தலைவர் சி.கே.பத்ரி சரவணன் உள்ளிட்டோர் இந்த நடைபயணத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதாக கூறப்படும் நிலையில் பா.ஜ.க நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் சிலர் பங்கேற்றது பரபரப்பு மற்றும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறுகையில், "மாற்றுக் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அல்ல. விஜய் மக்கள் இயக்க கொடியோடு பங்கேற்றவர்கள் இயக்கத்தின் பொறுப்பில் இல்லாதவர்கள். பா.ஜ.க நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்திற்கும் தொடர்பு இல்லை" என்று விளக்கம் அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“