நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியினர் 2026 தேர்தலை இலக்காகக் கொண்டு களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பிறகு, முதல் அரசியல் மாநாடு செப்டம்பர் 22-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. த.வெ.க முதல் அரசியல் மாநாடுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த மாநாடுக்கு முன்னதாக, விஜய் த.வெ.க-வின் கொடியை ஆகஸ்ட் 22-ம் தேதி அறிமுகம் செய்வார் என செய்திகள் வெளியானது. மேலும், பனையூரில் உள்ள த.வெ.க அலுவலகத்தில் 40 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. அப்போது, கொடியேற்றும் ஒத்திகையின்போது பறந்த கொடியின் வீடியோ புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில், நடிகர் விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகக் கொடியை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) ஏற்றி வைத்து, கொடிப் பாடலையும் வெளியிட உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப்பாடலை வெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்
தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று த.வெ.க தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“