தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இல்லை. 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு என்று கூறியிருந்தார்.
மேலும், விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகும் விஜய் அறிவித்தார். இந்நிலையில், கட்சிப் பெயரில் பிழை இருப்பதாக அறிவிப்பு வெளியானதுமே விவாதம் எழுந்தது. 'தமிழக வெற்றிக் கழகமா' அல்லது 'வெற்றி கழகமா ' என விமர்சனம் எழுந்தன. வெற்றி என்ற இடத்திற்கு அருகில் 'க்' வர வேண்டும் அதாவது 'வெற்றிக் கழகம்' என இருக்க வேண்டும் என தமிழ் மொழி அறிஞர்கள் உள்பட பலரும் கூறிவந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் கட்சிப் பெயரில் உள்ள பிழையை திருத்த விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மொழி அறிஞர்களின் கூற்றை ஏற்று வெற்றிக்கு பக்கத்தில் 'க்' சேர்க்க கட்சித் தலைவர் விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“