தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம் என்று கூறிய விஜய், முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப்போராட்ட வீரரும் பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு நாள் குருபூஜை புதன்கிழமை விழா நடைபெற்றது. பசும்பொன்னில் புள்ள அவரது நினைவிடத்தில், அமைச்சர்கள், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் சென்று மரியாதை செலுத்தினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நாளில், “தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்” என்று பதிவிட்டார்.
அந்த பதிவில் விஜய் பதிவிட்டிருப்பதாவது: “அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, த.வெ.க அலுவலகத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்கத் தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த வீடியோவைப் பகிர்ந்த த.வெ.க தலைவர் விஜய், “இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“