Advertisment

எதிர்ப்பு, ஆதரவு, வாழ்த்து... தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதா விஜயின் பிரமாண்ட மாநாடு?

விஜயின் அரசியல் மாநாடு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் இருக்கும் தலைவர்கள் பல்வேறு வகையான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அவை எதிர்ப்பு, ஆதரவு, வாழ்த்து என கலவையாக இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay rally Tamil politics DMK BJP AIADMK tamil news

அ.தி.மு.க மீதான விஜய்யின் "மௌனம்" த.வெ.க-வை "தி.மு.க மற்றும் பா.ஜ.க இரண்டிற்கும் சாத்தியமான மாற்றாக" நிலைநிறுத்துவதற்கான முயற்சியைக் குறிக்கலாம் என்று தமிழக அரசியல் வட்டாரங்களில் பலர் கருதுகின்றனர்.

அருண் ஜனார்த்தனன் - Arun Janardhanan 
Advertisment

தமிழ்த் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். அரசியல் களத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள அவர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாடு முடிவடைந்து 3 நாள்கள் ஆகி இருக்கும் சூழலில், அவரது முதல் அரசியல் மாநாடு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் இருக்கும் தலைவர்கள் பல்வேறு வகையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவை எதிர்ப்பு, ஆதரவு,  வாழ்த்து என கலவையாக இருக்கிறது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Vijay rally sets off churn in Tamil politics: DMK and BJP’s dismissal to AIADMK’s ‘wait and watch’

மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட த.வெ.க மாநாட்டில் உரையாற்றிய விஜய், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு மற்றும் தி.மு.க தலைமையிலான மாநில அரசு ஆகிய இரண்டையும் குறிவைத்து, தனது கட்சியின் சாதி எதிர்ப்பு, மதச்சார்பற்ற சித்தாந்தத்தை சுட்டிக்காட்டி, “திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள்." என்று முழக்கமிட்டார். மேலும், பெரியாரின் சித்தாந்தத்தை தனது கட்சி ஏற்றுக்கொள்ளும் என்றும், ஆனால், அவரது கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். 

இரண்டு முன்னணி திராவிடக் கட்சிகளான ஆளும் தி.மு.க மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வின் தலைவர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் நெரிசலான தமிழக அரசியல் களத்தில் விஜய் நுழைவதன் தாக்கங்களை எடைபோட்டு வருகின்றனர். .

அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி,  தனது கட்சியின் வாக்குகளை விஜயின் த.வெ.க பறிக்காது என்று நம்ம்பிக்கை தெரிவித்தார். “அவர் (விஜய்) அ.தி.மு.க வாக்குகளை பிரிக்க மாட்டார். நாங்கள் எங்கள் சித்தாந்தத்தை ஒருபோதும் நீர்த்துப்போகச் செய்யவில்லை. அரசியல் சூழ்நிலை அடிப்படையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்" என்று கூறினார்.

விஜய் தனது நீண்ட நெடிய உரையில் இறுதியாக, 'ஆட்சியில் அதிகாரப் பகிர்வு' என்பதை குறிப்பிட்ட நிலையில், த.வெ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்கலாம் எனப் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அதே நேரத்தில், பா.ஜ.க - தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் நேரடியாக தாக்கிப் பேசிய  விஜய், அ.தி.மு.க. பற்றி ஒரு வார்த்தையில் கூட நேரடியாக விமர்சிக்கவில்லை. எவ்வாறாயினும், அத்தகைய சலசலப்பை ஒதுக்கித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி, "உங்கள் கற்பனையில் இருந்து வரும் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

விஜய்யின் தாக்குதலுக்கு ஆளான தி.மு.க., அதை குறைத்து மதிப்பிட முயன்றது. மு.க.ஸ்டாலின் அரசின் "திராவிட மாடல்" ஆட்சியை "ஊழல் ஆட்சியின் மறுபக்கம்" என்று விமர்சித்த விஜய், உண்மையான நடவடிக்கை இல்லாமல் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறுபவர்களை கேலி செய்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், விஜய் முன்வைத்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்தனர். "காய் காய்க்கும் மரம் கல்லெறியப்படும்" என்றார் பாரதி. அதேவேளையில், இளங்கோவன், “அவர் (விஜய்) எங்களின் கொள்கைகள் அனைத்தையும் நகலெடுக்க முயற்சிக்கிறார்” என்றார்.

முதல்வர் ஸ்டாலினின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி, விஜய் தமிழக அரசியலில் நுழைவது குறித்த கேள்விகளுக்கு, “அவரது பேச்சைப் பார்த்த பிறகு கருத்து தெரிவிப்பேன்” என்று கூறினார். மேலும், பல தி.மு.க தலைவர்கள் எச்சரிக்கையாக பேசினர். இதில் இருந்து, தி.மு.க எதிர்ப்பு வாக்கு தளத்தில் விஜய் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

பா.ஜ.க தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல் முருகன், தேசியப் பிரச்சினைகளை அவர் புரிந்துகொள்வதைக் கேள்விக்குள்ளாக்கி, வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிரான அவரது கருத்துக்கள் குறித்து விஜய்யுடன் விவாதித்தார். "விஜய் எங்கள் சித்தாந்தத்திற்கு நேர்மாறானவர் என்பது தெளிவாகிறது, மேலும் அவரது அரசியல் திட்டங்களில் அவருக்கு தெளிவு இல்லை" என்று அவர் கூறினார். மேலும், தி.மு.க-வின் "வாரிசு அரசியல்" என்று பா.ஜ.க கருதுவதைக் குறிப்பிடுகிறார் என்றும் எல். முருகன் கூறினார். 

இதனிடையே, தொல் திருமாவளவன் தலைமையிலான தி.மு.க கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) விஜயின் கருத்தை முற்றிலுமாக புறக்கணிக்கவில்லை. வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "ஆட்சியில் அதிகாரப் பகிர்வு" என்ற விஜய்யின் அழைப்பை வரவேற்றார். இது அவரது கட்சியின் நிலைப்பாட்டை எதிரொலிப்பதாகவும் கூறினார். "அதிகாரத்தில் பங்கு பற்றிய எங்கள் கட்சியின் நிலைப்பாடு தமிழகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது" என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.

மற்றொரு தி.மு.க கூட்டணி கட்சியான காங்கிரஸும் விஜய்யின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியது. விஜய்க்கும் அவரது கட்சிக்கும் இடையே ஏதேனும் கூட்டணி அமையும் என்ற ஊகங்களை குறைத்து மதிப்பிடும்  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.செல்வப்பெருந்தகை, ஏற்கனவே இந்தியா கூட்டணியில் "சக்திவாய்ந்த தேசிய கூட்டணி" இருப்பதாக கூறினார். ராகுல் காந்திக்கும் விஜய்க்கும் நெருக்கம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், “விஜய் ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருப்பது உண்மைதான். ஆனால் நட்பு என்பது அரசியலில் இருந்து வேறுபட்டது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் உறுதியாக இருக்கும்" என்று மீண்டும் வலியுறுத்தினார். 

அ.தி.மு.க மீதான விஜய்யின் "மௌனம்"  த.வெ.க-வை "தி.மு.க மற்றும் பா.ஜ.க இரண்டிற்கும் சாத்தியமான மாற்றாக" நிலைநிறுத்துவதற்கான முயற்சியைக் குறிக்கலாம் என்று தமிழக அரசியல் வட்டாரங்களில் பலர் கருதுகின்றனர். இருப்பினும், பல அ.தி.மு.க தலைவர்கள் விஜய்யின் பேச்சு அல்லது அவரது பிரமாண்ட மாநாடு குறித்து கருத்து தெரிவிக்காமல், வெளிவரும் சூழ்நிலையை தாங்கள் கவனிப்போம் என்று கூறினர்.

விஜய்யின் பயணத்தை உன்னிப்பாகக் கண்காணித்த அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள “மந்தநிலை” குறித்து கேட்டபோது, ​​கலவையான எதிர்வினைகள் எதிர்பார்க்கப்பட்டதாகக் கூறினார். “இவை அனைத்தும் ஸ்கிரிப்ட்டின் ஒரு பகுதி. விஜய் கேள்விகளை எதிர்கொண்டு பரிணமிப்பார். அவர் ஊழலுக்கு எதிரானவர் என்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு முதலீட்டு விவகாரங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை ஏன் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது? குடும்ப அரசியல் என்பது அவரது பிரச்சினை என்றால், அவரது தொழில் வாழ்க்கையைத் தொடங்க உதவியது திரைப்பட இயக்குனராக அவரது தந்தையின் நிலை அல்லவா? மேலும் அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அவரது மகனுக்கு இளம் வயதிலேயே படம் இயக்க ஒப்பந்தத்தைப் பெறவில்லையா? என்று தி.மு.க வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

“அரசியலில் பயணிக்கும் போது இந்தக் கேள்விகளுக்கு விஜய் பதில் சொல்ல வேண்டும். உண்மையான சவால் அவரது நிலைத்தன்மையில் உள்ளது, இந்தக் கேள்விகள் அல்லது பதில்களில் அல்ல. இப்போது, ​​இரண்டு நாட்களில் படப்பிடிப்பிற்குச் செல்லும் அவர், ஜனவரியில் தான் திரும்பி வருவதால், இந்த மெகா மாநாட்டுக்குப் பிறகு பொங்கல் வாழ்த்துக்களை மட்டும் வெளியிடுவார். விஜய் ஒரு முக்கியமான சோதனையை எதிர்கொள்கிறார். மக்களுடன் நேரடியாக ஈடுபடாமல், தனது உயர்வான, தனிப்பட்ட வாழ்க்கை முறையைத் தக்க வைத்துக் கொண்டு, அரசியலை ஏமாற்ற முடியும் என்று அவர் நம்பினால், உண்மை விரைவில் அவரைப் பிடிக்கும், ”என்றும் தி.மு.க வட்டாரங்கள் தெரிவிகின்றனர்.

இந்த மாறுபட்ட எதிர்வினைகளுக்கு மத்தியில், விஜய் தனது ஆதரவாளர்களுக்கு நான்கு பக்க கடிதத்தை எழுதி இருக்கிறார். அதில், மாநாட்டிற்கு அதிக தொண்டர்கள் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்துள்ளார். 


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Actor Vijay Vijay Tamilaga Vettri Kazhagam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment