/indian-express-tamil/media/media_files/2025/10/02/vijay-karur-stampede-2025-10-02-13-21-40.jpg)
Vijay Karur stampede
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'ஒய்' பிரிவு பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா? என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது விரிவான விளக்கத்தைக் கோரியுள்ளது.
சமீபத்தில் கரூரில் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, விஜய்க்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்புக் குறித்து பல கேள்விகள் எழுந்தன.
இந்த உயிரிழப்புகளுக்குப் பிறகு, கரூர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் குண்டர்கள் விஜய்யை தாக்க முயற்சித்ததாகவும், செருப்புகளை வீசியதாகவும், பாதுகாப்பு குறைபாடு இருந்ததாகவும் கூறி, த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
இந்த நிலையில் தான், அன்றைய தினம் விஜய்யின் பாதுகாப்பு எவ்வாறு இருந்தது, அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் ஏதாவது குறைபாடு இருந்ததா? என்று உள்துறை அமைச்சகம் 'ஒய்' பிரிவு அதிகாரிகளிடமும், மத்திய ரிசர்வ் படை (CRPF) அதிகாரிகளிடமும் விளக்கம் கோரியுள்ளது.
பாதுகாவலர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா?
விஜய்க்கு கடந்த மார்ச் மாதம் முதல் 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படை சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து விஜய் செல்லக்கூடிய இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால், இது போன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க, எதிர்காலத்தில் விஜய்க்கான பாதுகாவலர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என்ற ஒரு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
'ஒய்' பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கும் விளக்கத்தின் அடிப்படையிலேயே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதுகாவலர்களின் எண்ணிக்கை உயர்வு குறித்த முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.