இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று பலரும் வலியுறுத்தி வரும் சூழலில், நடிகை ராதிகா அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜு விஜய் சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
சினிமா உலகில் சில ஆண்டுகளாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படிம் பயோ பிக் சினிமாக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முத்தையா முரளிதரன் வாழ்க்கை சினிமாவில் அவருடைய பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.
முத்தையா முரளிதரன், இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது, இலங்கை தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். இலங்கை அரசை ஆதரிப்பவர் அதனால், அவருடைய வாழ்க்கை சினிமாவில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இயக்குனர் பாரதிராஜா, சேரன், கவிஞர் தாமரை உள்ளிட்ட சினிமா துறையினரும் விசிக தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், விஜய் சேதுபதி 800 படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
#muthaiyamuralitharan biopic &asking @VijaySethuOffl not to act????do these people hav no work??why not ask @SunRisers why he is the head coach, team belongs to a Tamilian with political affiliations?VSP is an actor, and do not curb an actor. VSP&cricket both don’t warrant nonsense
— Radikaa Sarathkumar (@realradikaa) October 16, 2020
இந்த சூழலில், விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ராதிகா ட்வீட் செய்துள்ளார். ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்தையா முரளிதர பயோபிக்கில் விஜய் சேதுபதியை நடிக்கைக் கூடாது என்று கேட்பவர்கள் வேலை இல்லாதவர்கள்; அவர்கள் ஏன் சன் ரைசர்ஸ் அணியில் முத்தையா முரளிதரன் தலைமை கோச்சாக இருக்கிறார் என்று கேள்வி கேட்பதில்லை. அந்த அணி அரசியல் கட்சி தொடர்புடைய தமிழரின் அணி என்பதால் கேட்கவில்லையா? விஜய் சேதுபதி ஒரு நடிகர். ஒரு நடிகை நடிக்க கூடாது என்று தடுக்க கூடாது. விஜய் சேதுபதியும் கிரிக்கெட்டும் முட்டாள்தனங்களுக்கு உத்தரவாதம் அளிக்க கூடாது” என்று ட்வீட் செய்துள்ளார்.
இதனிடையே, கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான திரைப்படத்தில் நடிப்பது நடிகர் விஜய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை. ஆனால், மக்களின் உணர்வுகளையும் அவர் மதிக்க வேண்டும். முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த உணர்வாளர்களின் உணர்வுகளை மதிக்கவேண்டிய இடத்தில் அவர் உள்ளார். நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது.
திரைப்படத் துறையைப் பொருத்தவரை அதிமுக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. தற்போது திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது நடைமுறைக்கு எப்படி சாத்தியப்படும் என்பது குறித்து திரையரங்கு உரிமையாளர்களிடம் தமிழக அரசு கலந்து ஆலோசித்து, அவர்களின் கருத்துகளைப் பெற்று அதன் பின்னர் திரையரங்குகள் திறந்தால் தான் சரியாக இருக்கும். நான் திங்கள்கிழமை சென்னை சென்றவுடன் ஓரிரு நாட்களில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளை, தமிழக முதல்வரிடம் நேரடியாக அழைத்துச் சென்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அதில் அவர்களது கருத்துகளை தெரிவித்து அவர்களின் ஒப்புதல் பெறப்படும். பின்னர் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் குறித்து, அதிகாரிகளிடம் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்துக்குள் நல்ல முடிவு வரும்” என்று கூறினார்.
800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று எழுந்துள்ள எதிர்ப்புக் குரல்கள் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று கருத்து தெரிவிக்கையில், “800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து பேசிய அவர், “முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது பல விவகாரங்களை திசை திருப்பும் வகையில் உள்ளது. வேறு பல பிரச்சனைகள் இருக்கும்போது இதுகுறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.