அரசியல் களத்தில் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் ஏற்படுத்திய மாற்றத்தை தமிழக வெற்றிக் கழகமும் உருவாக்கும் என விஜய் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (பிப் 26) தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது, தி.மு.க மற்றும் பா.ஜ.க-வை அவர் கடுமையாக விமர்சித்தார்.
அதன்படி, "1967 மற்றும் 1977 ஆகிய ஆண்டு தேர்தல்களில் ஏற்பட்டதை போன்ற ஒரு மாற்றம், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் உருவாகும். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். மதசார்பற்ற மற்றும் ஜனநாயக முறையில் தமிழகத்தில் பணியாற்றுவோம்.
மும்மொழிக் கொள்கை பிரச்சனை மீண்டும் தமிழகத்தில் கிளம்பியுள்ளது. இதனை செயல்படுத்தவில்லை என்றால், கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு வழங்க மாட்டோம் என மத்திய அரசு கூறியுள்ளது. இது பார்ப்பதற்கு எல்.கே.ஜி - யூ.கே.ஜி சிறுவர்களின் சண்டை போன்று உள்ளது. நிதியை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
நிதியை பெற்றுக் கொள்வது மாநில அரசின் உரிமை. ஆனால், நம் அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் ஒருவரையொருவர் சமூக வலைதளங்களில் வசைபாடுகின்றனர். இவர்கள் இருவரும் சண்டையிடுவதை போன்று நடிக்கின்றனர். இதனை நாம் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். Its very wrong bro. இதற்கு நடுவே நம் தொண்டர்கள் TVK For TN என ஹேஷ்டேக் போட்டனர்.
சுயமரியாதையை எதற்காகவும் நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம் அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். தனிப்பட்ட முறையில் எந்த பள்ளியில் வேண்டுமானாலும் பயிலலாம். ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை மீறி, மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மொழி மற்றும் கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்க கூடாது.
மக்களுக்கு பிடித்துப் போன ஒருவர் அரசியலுக்கு வந்தால், அவரை சிலர் எதிர்க்கிறார்கள். இந்த சூழலில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். நம் கட்சியை பலப்படுத்தும் வேலையை நாம் செயல்படுத்துகிறோம். இந்நிலையில், நம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இளைஞர்களாக இருப்பதாக நம் மீது குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.
இளைஞர்களாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு பின்னால் இருந்தவர்களும் இளைஞர்கள் தான். அந்த இளைஞர்களால் தான் பெரும் வெற்றி கிடைத்தது. நம் கட்சி நிர்வாகிகள் எல்லோரும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறுகிறார்கள். நம் கட்சியே எளிய மக்களுக்கானது தான். நாம் ஒன்றும் பண்ணையார்களுக்காக கட்சி நடத்தவில்லை.
இப்போது பதவியில் இருப்பவர்கள் எல்லாம், பண்ணையார்களாக மாறுகின்றனர். இந்த பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவது தான் நம் பணி. கூடிய விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும். தமிழக வெற்றிக் கழகம் எந்தவொரு பெரிய கட்சிக்கும் சளைத்தது இல்லை என எல்லோரும் அன்றைய தினம் அறிந்து கொள்வார்கள்" என விஜய் தெரிவித்துள்ளார்.