"டாஸ்மாக் முறைகேடு; விளம்பர மாடல் தி.மு.க அரசு குறித்து ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு உள்ளது": விஜய் கடும் விமர்சனம்

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தி.மு.க-வை குற்றம்சாட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தி.மு.க-வை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தி.மு.க-வை குற்றம்சாட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தி.மு.க-வை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TVK VIjay Speech

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையின் அறிக்கையை குறிப்பிட்டு, தி.மு.க-வை விஜய் விமர்சித்துள்ளார். குறிப்பாக, ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும், தி.மு.க அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் /நபர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த 6-ஆம் தேதி (06.03.2025) அன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அச்சோதனையின் முடிவாக, அமலாக்கத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களைப் பணியமர்த்துதல், இடமாற்றம் செய்தல், வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு. பார் உரிமம் வழங்கும் டெண்டர் ஒதுக்கீடு, கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் பெறப்பட்ட ரூபாய் 10 முதல் 30 வரையிலான கூடுதல் தொகை. டிஸ்டில்லரீஸ் மற்றும் பாட்டிலிங் கம்பெனிகள் மூலம் நடந்த முறைகேடுகளைப் பற்றிப் பெரிய பட்டியலே அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறைகேடு பற்றி விளக்கும்போது, நன்கு திட்டமிடப்பட்ட கணக்கில் வராத பணம் ஈட்டுதல் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான பணம் பெறுதல் (a well-orchestrated scheme of unaccounted cash generation and illicit payments), டிஸ்டில்லரீஸ் கம்பெனிகளுக்கும், பாட்டில் கம்பெனிகளுக்கும் இடையில் இருந்த மிகப் பெரிய கூட்டு (the collusion between distilleries and bottling companies) மூலம் நிதி சம்பந்தமான ஆவணங்கள் தவறாகக் கையாளப்பட்டது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இதை வைத்துப் பார்க்கையில், முறைகேடு செய்வதில் பெரும் அனுபவம் வாய்ந்த, கைதேர்ந்த மற்றும் நுட்பமான மூளைகளால் மட்டுமே இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவே அர்த்தம் கொள்ளத் தோன்றுகிறது.

அமலாக்கத் துறை, டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்துப் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளைப் பார்த்தால், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது.

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பறைசாற்றும் இதே அரசுதான் மக்கள் நலனைக் கெடுத்து, மதுவிற்கு அடிமையாக்கும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்துத் தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது எனப் பொதுமக்களே கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர்.

ஊழலில், காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே தி.மு.க-வின் ஆட்சி அதிகார வரலாறு. அமலாக்கத் துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீரே. இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால், இந்த டாஸ்மாக் முறைகேட்டில் மட்டுமே சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது.

 

 

ஆகவே, இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான, நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஆனால், விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்.

இந்த வேளையில், இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்புச் சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல. ஆனால், எத்தனைக் கோடிகளைக் கொட்டினாலும், இனி இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது. இவர்களை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dmk Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: