"விளம்பர மாடல் அரசு பட்ஜெட்டில் போலித்தனமே அதிகம் உள்ளது": தி.மு.க மீது விஜய் கடும் குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மக்களுக்கு வேண்டிய அடிப்படை தேவைகள் பூர்த்தி அடையவில்லை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மக்களுக்கு வேண்டிய அடிப்படை தேவைகள் பூர்த்தி அடையவில்லை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
TVK VIjay Speech

தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக, மக்களின் அடிப்படை தேவைகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான அறிக்கை ஒன்றை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

அதில், "தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன், பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே.

புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்?

Advertisment
Advertisements

அடிப்படையான சாலை வசதிகளைக் கவனிக்காமல் அன்புச் சோலை போன்ற போலி அக்கறை காட்டும் வெற்று அறிவிப்பு ஏன்?

கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படுவது போல, பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லையே ஏன்?

ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு, வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா? இல்லை, வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

அண்ணா பல்கலையைத் தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.

மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பு குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் விளக்கப்படவே இல்லை. மாறாக, மக்கள் நலன் சார்ந்த எந்த விளக்கமும் இல்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு, பரந்தூர் பகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே இருக்கும்.

விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் வாக்குறுதியான கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் என்பது என்ன ஆனது என்று தெரியவில்லை. அதே போல, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, வாக்குறுதியில் சொன்னது போல முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மேலும், ரேஷனில் சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளும் என்ன ஆயின என்றே தெரியவில்லை.

பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் மின்சாரக் கட்டணம், மாதம்தோறும் செலுத்தக்கூடியதாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனதோ? வெற்று விளம்பர அரசுக்கே வெளிச்சம்.

அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் குடியிருப்புகள் கட்டுவது இருக்கட்டும். அரசு ஊழியர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் நலன் சார்ந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துவது, பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.

இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையாக ஏதேதோ அறிவிப்புகள் என்று போலித்தனமே அதிகம் உள்ளது. ஆனால், சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.

விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது. இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இதுதான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு ஆகும்.

 

 

மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு. இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப் பெரிய பதிலடியாக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை, இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு விரைவில் உணரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilnadu Government Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: