தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் உரையாற்றிய விஜய், 'ஒரு முடிவோட வந்திருக்கேன்; பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை' எனக் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. இதில், கட்சியின் கொள்கை, செயல்திட்டங்கள் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன. அதேபோல், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், மாநாடு தொடங்கியது முதலே விஜய்யின் உரையைக் கேட்க கட்சி தொண்டர்கள் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் எல்லோரும் ஆவலாக இருந்தனர். அதன்படி, கொள்கை விளக்க பாடல்கள் மற்றும் செயல்திட்டங்கள் அறிமுகம் செய்து வைத்த பின்னர் விஜய் உரையாற்றினார்.
விஜய் தனது உரையை தொடங்குவதற்கு முன்பாக தனது பெற்றோரிடமிருந்து ஆசி பெற்றார். அதன் பின்னர், தனது பேச்சை தொடங்கிய விஜய், கட்சி கொள்கைகள் மற்றும் கொள்கைத் தலைவர்கள் குறித்து தொண்டர்கள் இடையே விளக்கமளித்தார். தாய், குழந்தை மற்றும் பாப்பு ஆகிய உவமைகளை கூறிய விஜய், அரசியலை பாம்பு என உருவகப்படுத்தினார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார் போன்றோரின் கொள்கைகளை பிரதானப்படுத்தி கட்சி பணியாற்றும் என அவர் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய விஜய், 'ஒரு முடிவோடு வந்திருக்கேன்; பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை' எனக் கூறிய போது தொண்டர்களிடையே பலத்த கரோகஷம் எழுந்தது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது, அதன் வருமானம் வேண்டாமென உதறிவிட்டு மக்கள் பணியாற்ற வந்துள்ளதாகக் கூறிய விஜய், இனி திரும்பிப் போகும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறினார்.
விஜய்யின் இந்த பேச்சு அவரது தொண்டர்கள் இடையே உத்வேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்தாலும், அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“