/indian-express-tamil/media/media_files/2025/04/26/ZB3VxtEO3xJ7zkBEZAYb.jpg)
தமிழகத்தில் வரும் 2026-ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கோவையில் இன்று (ஏப்ரல் 26) பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, "கோவை என்றாலும், கொங்கு பகுதி என்றாலும் இந்த மண் மற்றும் மக்களின் மரியாதை தான் ஞாபகத்திற்கு வரும். தற்போது, பூத் லெவல் ஏஜெண்ட் பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. ஆனால், இங்கு கூடி இருக்கும் கூட்டத்தை பார்த்தால் திருவிழா போன்று இருக்கிறது.
ஆட்சி, அதிகாரம் என்றாலே வாக்கு தொடர்பானது தான். ஆனால், இது வாக்குக்காக மட்டும் நடக்கும் விஷயம் கிடையாது. நாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து பேச இங்கு கூடி இருக்கிறோம்.
இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் செய்ததை, நாம் செய்யப்போவது இல்லை. நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது மக்கள் நலனுக்காக மட்டுமே. மக்களிடம் சென்று எப்படி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று மட்டும் இங்கு பேசப் போவதில்லை.
இவை அனைத்திற்கும் மேலாக மக்களிடம் எப்படி ஒருங்கிணைந்து நாம் பணியாற்ற போகிறோம் என்பது முக்கியம். இதற்கு முன்னர் இங்கு நிறைய பேர் வந்திருக்கலாம். நிறைய பொய்களை கூறி இருக்கலாம். அவர்கள் ஆட்சியையும் பிடித்திருக்கலாம். ஆனால், அது எல்லாம் பழைய கதை.
அதை செய்வதற்கு நான் இங்கு வரவில்லை. இனி அத்தகைய விஷயங்கள் நடக்க நான் விட மாட்டேன். நமது கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை கொண்டு வரப்போவதே பூத் லெவல் ஏஜெண்டுகள் தான். இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் போர் வீரர்கள் தான்.
நாம் இங்கு வந்ததன் நோக்கம் என்ன என்றும், எப்படிப்பட்ட ஆட்சி வழங்க நாம் வந்திருக்கிறோம் என்றும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். ஏனெனில், நம் மனதில் நேர்மை இருக்கிறது. கறைபடியாத உண்மை நம்மிடம் இருக்கிறது. நமக்கான களம் தயாராக இருக்கிறது" என்று விஜய் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.