தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், களத்திற்கு சென்று மக்கள் பணியாற்ற தயங்கக் கூடாது என அக்கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வி. சாலையில் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இதைத் தொடர்ந்து, கட்சியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் நிர்வாகிகளுடன் இணைந்து விஜய் செயலாற்றி வந்தார்.
கடந்த ஜனவரி 24-ஆம் தேதி சென்னை, பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் புதிய நிர்வாகிகள் நியமன கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளையும் 120 நிர்வாக மாவட்டங்களாக பிரித்து கட்சி பணி ஆற்றும் விதமாக முடிவு செய்யப்பட்டது. அதன் முதல்கட்டமாக மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்றைய தினம் (ஜன 31) இதன் மூன்றாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் நியமன கூட்டம் நடைபெற்றது. அதன்படி, "தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய் பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திலும் விஜய் உரையாற்றினார். அப்போது, "மக்கள் பணிகளை இனி தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கட்சி நிர்வாகிகள் களத்திற்கு சென்று பணியாற்ற தயங்கக் கூடாது. உங்கள் உழைப்பில் தான் கட்சியின் வளர்ச்சி இருக்கிறது. நானும் உழைக்கிறேன்; நீங்களும் உழையுங்கள்; வெற்றி அடைவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனாவையும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணை பொதுச்செயலாளராக நிர்மல் குமாரையும் நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.