நடிகர் விஜயின் ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம், தேர்தல் ஆணையத்தில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, நடிகர் விஜய் எனது தந்தை தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜயை, அவருடைய ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
முதலில் விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றங்களாக இருந்த ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகத்தை நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், கவனித்து வந்தார். அவர் அவ்வப்போது பல மாவட்டங்களுக்கு சென்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தார்.
இந்த சூழ்நிலையில்தான், விஜயின் மக்கள் இயக்கம் தலைமை தேர்தல் ஆணையத்தில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் கட்சியாக பதிவு செய்யும் விண்ணப்பத்தில், விஜயின் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதைப் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நடிகர் விஜய் என் தந்தை ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்து உள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப் படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். மேலும், எனது ரசிகர்கள் எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கட்சிக்கும் நமக்கும் நம் இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.