நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் திரண்டிருந்த ஆயிரக் கணக்கான ரசிகர்களைப் பார்த்து நடிகர் விஜய் கையசைத்து நன்றி தெரிவித்தார். பின்னர், ரசிகர்கள் கூட்டத்துடன் எடுத்தச் செல்ஃபியை தனது டுவிட்டரில் பதிவிட்டு நெய்வேலிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் கடந்த 4-ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கிற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, விஜய் நெய்வேலி சுரங்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது கடந்த 5-ம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய் நடித்த பிகில் படத்தில் வாங்கிய சம்பளம் தொடர்பாக விசாரணை நடத்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டார். பின்னர், பனையூரில் உள்ள அவருடைய இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, நெய்வேலியில் மீண்டும் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கியது. வருமானவரித்துறை விசாரணையில் பாஜகவின் அரசியல் இருப்பதாக பேச்சு எழுந்ததைத் தொடர்ந்து, நெய்வேலி படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், கடந்த 2 நாட்களாக நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் பகுதியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே விஜய்யைக் காண ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் கூட்டமாக திரண்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே வந்து ஒரு வேன் மீது ஏறி ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
இதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் கடந்த இரண்டு நாட்களாக நடிகர் விஜய்யைக் காண ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் நடைபெறும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே காத்திருந்தனர். இதனால், பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த லேசான தடியடியும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நெய்வேலி சுரங்கத்தில் இன்று திங்கள்கிழமை மாஸ்டர் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், நெய்வேலி சுரங்கம் பகுதியில் விஜய்யைக் காண ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் குவிந்து பெரும் கூட்டமாகக் காணப்பட்டனர். இதனால், பாதுகாப்பு கருதி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
நெய்வேலியில் ஷூட்டிங் முடித்த கையோடு இன்றும் ரசிகர்களை சந்தித்த விஜய்! @actorvijay #Master #Neyveli | https://t.co/jxhyjmvA6f pic.twitter.com/FNMgzrXhzc
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 10, 2020
மேலும், விஜய் ரசிகர் மன்றத் தலைவர் குஷி ஆனந்த் அங்கே வந்து ரசிகர்களை அமைதி காக்குமாறும் விஜய் ரசிகர்களைப் பார்த்து பேசுவார் என்றும் கூறினார். இதனால், விஜய் ரசிகர்கள் கூட்டம் ஆரவாரத்துடன் கட்டுக்கடங்காமல் திரண்டு விஜய்யை பார்ப்பதற்காகவும் அவருடைய பேச்சைக் கேட்பதற்காகவும் காத்திருந்தனர்.
Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020
மாலையில், படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு வெளியே வந்த விஜய், அங்கே நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்து மீது ஏறி ரசிகர்களைப் பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்தார். பின்னர், விஜய் ரசிகர்கள் கூட்டத்துடன் பேருந்து மீது நின்றபடி தனது செல்போனில் செல்ஃபி எடுத்தார். அப்போது ரசிகர்கள் விஜய்யைப் பார்த்து மகிழ்ச்சியில் கூக்குரலிட்டு ஆரவாரித்தனர்.
விஜய் ரசிகர்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவும் பேசவில்லை. சிறிது நேரத்தில், விஜய் ரசிகர்கள் கூட்டத்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நெய்வேலிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
வருமானவரித்துறையில் அரசியல் இருப்பதாக பேச்சு எழுந்துள்ள நிலையில், நெய்வேலி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் தனது ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்திவிட்டு சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.