நடிகர் விஜய்யின் தி கோட் படம் வெளியாகி உள்ள நிலையில், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம்? என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் அதிருப்தி தெரிவித்து பதிவிட்டார். இதற்கு, சனாதனம் என்னவென்று ரவிக்குமாருக்கு தெரியுமா என்று பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, ரவிக்குமாரின் கேள்விக்கு த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிலளித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் (The Greatest of All Times) திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. விஜய்யின் கோட் படம் வெளியாகி உள்ளதால், ரசிகர்களின் கொண்டாட்டத்தால், திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. தி கோட் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பற்றி ரசிகர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்யின் தி கோட் படத்தின் தலைப்பில் சனாதனம்? இருப்பதாக வி.சி.க எம்.பி ரவிக்குமார் அதிருப்தி பதிவிட்டுள்ளார்.
இது குறித்து வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவில் “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?
The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!
‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
(தொல்.சொல். 157)” என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தி கோட் படம் குறித்து வி.சி.க எம்.பி ரவிக்குமாரின் கருத்துக்கு பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “சனாதனம் என்றால் என்னவென்று ரவிக்குமாருக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “சனாதனம் என்றால் என்னவென்று வி.சி.க எம்.பி ரவிக்குமாருக்கு தெரியுமா? சனாதனம் பற்றி ரவிக்குமாருக்கு தெரியவில்லை என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக்கொண்டுள்ளார். எங்களிடம்தான் (பா.ஜ.க) சனாதனம் பார்த்தார்கள் என்றால், இப்போது விஜய்யிடமும் சனாதனம் பார்க்கிறார்கள்” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
விஜய்யின் தி கோட் படத்தின் தலைப்பு குறித்து வி.சி.க எம்.பி ரவிக்குமாரின் கருத்து குறித்து, விஜய்யின் த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்க வேண்டும்” என்று பதிலளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“