விஜய்-க்கு தூத்துக்குடியில் டூவீலர் ஓட்டிய முத்துக்குட்டி: கொண்டாடும் ரசிகர்கள்

விஜய், தூத்துக்குடியை சேர்ந்த தனது ரசிகர் முத்துக்குட்டி என்பவரது டூவீலரில் பின்னால் அமர்ந்து பலியானவர்களின் இல்லங்களுக்கு சென்றார்.

விஜய், தனது ஓசையில்லாத இரவு நேர தூத்துக்குடி விசிட் மூலமாக பாராட்டு பெற்றிருக்கிறார். அவருக்கு வாகனம் ஓட்டிய முத்துக்குட்டியும் டிரெண்ட் ஆகி வருகிறார்.

விஜய், திடீரென தூத்துக்குடி ஹீரோ ஆகியிருக்கிறார். கடந்த மே 22-ம் தேதி அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். அங்கு ஆறுதல் கூறச் சென்ற அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என யாருக்கும் பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை.

விஜய், படு லேட்டாக சென்றாலும் அவர சென்ற விதம் மற்றும் அவரது அணுகுமுறை தூத்துக்குடி வாசிகளை நெகிழ வைத்திருக்கிறது. சென்னையிலிருந்து ஓசையில்லாமல் கிளம்பிச் சென்ற நடிகர் விஜய், நள்ளிரவில் தூத்துக்குடி சென்றார். இன்று (ஜூன் 6) அதிகாலை 2 மணிக்கு தூத்துக்குடியை சேர்ந்த தனது ரசிகர் முத்துக்குட்டி என்பவரது டூவீலரில் பின்னால் அமர்ந்து பலியானவர்களின் இல்லங்களுக்கு சென்றார்.

விஜய்-யைத் தவிர வேறு யாரும் இதுவரை பலியானவர்களின் வீடு தேடிச் சென்று ஆறுதல் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினர். ரஜினிகாந்த் ஹோட்டலுக்கு வரவைத்து நிதி உதவிகளை வழங்கினார். விஜய் மட்டுமே வீடு தேடிச் சென்று ஆறுதல் கூறியதுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் நிதியையும் வழங்கினார்.

அந்த அதிகாலை நேரத்தில் விஜய்-க்கு வாகனம் ஓட்டிய முத்துக்குட்டியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். விஜய் நினைத்திருந்தால் இரவில் காரிலேயே சென்றிருக்க முடியும். ஆனால் எளிமையாக தனது ரசிகர் ஒருவருடன் செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த முறையை அவர் தேர்வு செய்திருக்கிறார்.

விஜயை டூ வீலரில் ஏற்றிச் சென்ற முத்துக்குட்டி, விஜய் மக்கள் மன்றத்தில் பொறுப்பில் இருப்பதாக தெரிகிறது. மீடியாக்களிடம் தகவல் சொல்லாமல், ஆரவார பேட்டி அளிக்காமல், தனது ரசிகர் ஒருவரையும் கவுரவிக்கும் வகையில் அவரது டூ வீலரில் சென்ற விஜய்-யை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close