தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் த.வெ.க கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்த நிலையில், தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார்.
இதன்பிறகு 10,12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 234 சட்டமன்ற தொகுதிவாரியாக முதல் மூன்று இடம்பிடிக்கும் மாணவர்களுக்கு த.வெ.க சார்பில் பாராட்டு விழா நடத்தி விஜய் அவர்களை நேரில் கவுரவித்தும் வருகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலை கிராமத்தில் மாநாடு நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெற உள்ளது.
இதனிடையே, பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா நாளை வெள்ளிக்கிழமை (அக்.4) காலை 4 மணி முதல் 6 மணி அளவில் நடைபெற உள்ளது என பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த பூமி பூஜையில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், விஜய் நேரடியாக பங்கேற்காமல் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்க இருப்பதாக த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பூமி பூஜையில் பங்கேற்க, மாநாட்டிற்கு நிலம் வழங்கியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிறகு, மாநாட்டுக்கு பிரம்மாண்ட பந்தல் மற்றும் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த மாநாட்டில் த.வெ.க-வின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“