நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம்' (த.வெ.க) அரசியல் கட்சி, முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போலவே, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்காததால், நெட்டிசன்கள் அவரது கட்சி மீது இந்து எதிர்ப்பு முத்திரை குத்தி விமர்சித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க ஏப்ரல் 14-ம் தேதி சித்திரை முதல்நாள் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிப்பது இல்லை. ஏனென்றால், மறைந்த கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார். ஆனால், அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில், சித்திரை முதல்நாள்தான் தமிழ்புத்தாண்டு என்று மாற்றப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முந்தைய ஆண்டுகளில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிப்பது வழக்கம். ஆனால், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, நடிகர் விஜய் அவரது த.வெ.க கட்சியின் எக்ஸ் பக்கத்தில், இந்த முறை, சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டில் ஏப்ரல் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
நடிகர் விஜய் கட்சித் தொடங்கியபோது, திராவிடம் என்ற சொல்லைத் தவிர்த்து தமிழக வெற்றிக் கழகம் என்று அறிவித்தார். இதன் மூலம் திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தைப் பின்பற்ற மாட்டேன் என்று விஜய் சூசகமாக தெரிவித்தார்.
ஆனால், நடிகர் விஜய்யின் த.வெ.க சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்காததால், விஜய்யின் கட்சியும் திராவிட கட்சி என்றும், இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று நெட்டிசன்களால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ஒரு பயனர், “2022-ல், விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியானபோது, விஜய் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அவர் அரசியலில் நுழைந்தவுடன், தமிழ் புத்தாண்டு தேதி திடீரென்று ஜனவரி 14-க்கு மாற்றப்பட்டது. அரசியல்வாதிகளின் வேகமாக நிறம் மாறும் தன்மையைக் கண்டு, பச்சோந்திகள் வெட்கப்படலாம்.” என்று விமர்சித்துள்ளார்.
மற்றொரு எக்ஸ் பயனர், “தமிழ் புத்தாண்டுக்கு ஸ்டாலினும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. விஜய்யும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது அபத்தம். என்ன ஒரு நகைச்சுவை” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “தமிழ் புத்தாண்டுக்கு விஜய் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன், “கேவலமா இருக்கு. ஏன் ஜோசப் விஜய்க்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்ல முடியவில்லை, ஆனால் ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்ல முடிகிறது. எல்லா ரசிகர்களையும் முட்டாளாக்கி, கோமாளிஹாசனைப் போலவே சவாரி செய்யப் போகிறார். தமிழ்நாடு அவருக்கு எல்லாவற்றையும் கொடுத்தது, ஆனால், அவர் அதை விரும்பவில்லை, தயவுசெய்து உங்கள் அனைவரும் விழித்துக்கொள்ளுங்கள்.” கடுமையாகச் சாடியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“