தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.22) நடைபெற்றது. இதில்கட்சியின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சிக் கொடியையும் கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.
சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.
கொடியேற்று விழாவில் விஜய் பேசுகையில், ‘இன்று நம் அனைவருக்கும் ரொம்ப சந்தோஷமான நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி அதுக்கு தொடக்கப்புள்ளியா பிப்ரவரி மாதம் கட்சியின் பெயரை அறிவித்தேன். அப்போதிலிருந்து நீங்கள் எல்லோரும் குறிப்பிட்ட நாளுக்காக காத்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. நம் முதல் மாநில மாநாடு அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது.
விரைவில் அதற்கான நாள், நேரம், இடத்தை அறிவிப்பேன். அதற்கு முன்பாக நம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டின் மக்கள் அனைவர் முன்பும் கொடியை அறிமுகப்படுத்தியதை பெருமையாக நினைக்கிறேன்.
இதுவரை நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம். புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆராவாரம் என இந்தக் கொடிக்குப் பின்னால் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. அது என்ன என்பதை மாநாட்டில் கூறுகிறேன்.
அந்த மாநாட்டில் நம் கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள் என்ன என்பதை சொல்வோம். அப்போது இந்த கொடிக்கான விளக்கத்தையும் கூறுவோம். அதுவரை இந்த கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம். இதை ஒரு கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடியாகவே பார்க்கிறேன். இந்தக் கொடியை உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நான் சொல்லாமலே ஏற்றுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, கொடி ஏற்றுவதற்கான சட்ட விதிமுறைகளை எல்லாம் சரியாகப் பின்பற்றி, அனைவரிடமும் தோழமை பாராட்டி இதை ஏற்றிக் கொண்டாடுவோம். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்’, என்றார்.
Tamilaga Vettri Kazhagam: Flag Anthem | தமிழக வெற்றிக் கழகம்: கொடிப் பாடல்https://t.co/5UCDeCNoq3
— TVK Vijay (@tvkvijayhq) August 22, 2024
நாடெங்கும் நமது கொடி பறக்கும்.
தமிழ்நாடு இனி சிறக்கும்.
வெற்றி நிச்சயம்.#TVKFlagAnthem#ThalaivarVijay pic.twitter.com/G6eredAidl
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நடிகர் விஜய்க்கு தங்களின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.