விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களத்தில் வேகமாக செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தீவிர முனைப்பில் உள்ளனர். விஜய்யின் த.வெ.க கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மாநாடு நடத்துவதற்காக ஆயத்த பணிகளில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், த.வெ.க. கட்சிக்கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பைந்தமிழ் சங்க இலக்கியங்களில் போரில் வெற்றி பெற்றவர்கள் சூடிக் கொள்ளும் மலராக வாகை மலர் இருந்துள்ளது. அதனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற அடிப்படையில் த.வெ.க. கட்சிக்கொடியில் வாகை மலர் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல, விஜய் என்றால் வெற்றி என்ற அடிப்படையிலும் வாகை மலர் இடம்பெறவுள்ளதாக பேசப்படுகிறது. எப்படியோ, விஜய் தனது கட்சிக் கொடியில் வாகை மலரை வைத்து வாகை சூட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“